
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக இத்தாலி மாறியுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை பிரான்சில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
பிரான்சில் தற்போது 10,995 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கபப்ட்டுள்ளனர். சுகாதார இயக்குனர் Jérôme Salomon, தனது தின செய்தி அறிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். “பிரான்சில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது” என குறிப்பிட்ட அவர், சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தற்போது 4,461 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 372 பேரில் 6 வீதமானவர்கள் மாத்திரமே 60 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் சுகாதார இயக்குனர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கடந்த நான்கு நாட்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், பிரான்ஸ் தற்போது உச்சபட்ச ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களாக முறையே, Île-de-France, Grand Est, Corsica, Auvergne-Rhône-Alpes, Hauts-de-France மற்றும் Bourgogne-France-Comté உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
‘மக்கள் பொறுப்பற்று வெளியே சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்றைய நாளில் கண்டனம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.