புங்குடுதீவு மாணவியின் கொலையினைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறையின் பின்னர் யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களும் ஹர்த்தலும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் இடம்பெற்றன.
கடந்த 20 ஆம் திகதி யாழ் . நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. எனினும் ஜனநாயக போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்ற நல்லெண்ண நோக்கத்துடன் பொலிஸார் போராட்டக்காரர்களை தாம் தடுக்கவில்லை என கூறுகின்றனர்.
இந்த நிலையில் உள்நுழைந்த போராட்டக்காரர்கள் நீதிமன்றத்தினை கல்லுகள் மற்றும் பொல்லுகள் கொண்டு தாக்கி சேதப்படுத்தயதுடன் சிறைச்சாலை வாகனம் , சட்டத்தரணிகளின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியிருந்தனர்.
போராட்டக்காரர்களின் தாக்குதலில் சிக்கி 5 பொலிஸார் உட்பட சட்டத்தரணி ஒருவரும் காயமடைந்திருந்தார். கலகத்தை அடக்குவதற்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் களத்தில் இறங்கினர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸார் , அதிரடிப்படையினருக்கும் இடையில் கச்வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இதனைத் தடுக்கும் நோக்குடன் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுப் பிரயோகம் மேற்கொண்டனர்.
எனினும் சுமார் 4 மணி நேரம் வரை நீடித்த பதட்டம் ஒருவாறு சமூகநிலைக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து யாழ். நகர், போதனா வைத்தியசாலை, பொலிஸ் நிலையம் , நீதிமன்ற வளாகம் , சிறைச்சாலை , மாவட்ட செயலகம் ஆகியனவற்றில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸாரும் கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்தும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் கடந்த கால போர்ச்சூழல்போல யாழ்ப்பாணம் காணப்படுகின்றதுடன் பதட்டமான சூழலுமே தொடர்ந்தும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.