இன்று திங்கட்கிழமை முதல் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒருவாரக் காலப்பகுதி வரை மத ரீதியான ஊர்வலங்கள், பேரணிகளைத் தவிர வேறெந்த பேரணிகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாதென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சகல கட்சிகளினதும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று நண்பகலுடன் பூர்த்தியடையவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், உயர்மட்ட அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாட்டின் எப்பாகத்திலும் ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் சகல பொலிஸ் நிலையங்களிலும் நடமாடும் பொலிஸாரை இப்பணிகளுக்காக ஈடுபடுத்தியுள்ளனர்.
இத்துடன் இதுவரை தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் பத்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.