சுழிபுரத்தில் கடற்றொழிலாளர்களின் பாதையை ஆக்கிரமித்தது கடற்படை; மீட்டுக்கொடுத்தார் சட்டத்தரணி சுகாஸ்!

0
531

சுழிபுரம் – சவுக்கடியில், கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லும் பாதையை அபகரித்து தமது முகாமை விஸ்தரிக்க முற்பட்ட கடற்படையினரின் செயற்பாடு முறியடிக்கப்பட்டது.

சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சட்டத்தரணி கே.சுகாஸ் மேற்படி கடற்படையின் அபகரிப்பை தடுத்து நிறுத்தியுள்ளார்.

சுழிபுரத்தை சேர்ந்து 300 இற்கும் அதிகமான கடற்றொழிலாளர்கள் சவுக்கடி கடற்கரையில் தமது வாடிகளை அமைத்து கடற்றொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பூர்வீகமாக இந்த இடத்தில் இருந்தே தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்களின் கவனம் திசை திரும்பியுள்ள சூழலை தமக்கு சாதமாக பயன்படுத்திய சிறிலங்கா கடற்படையினர், மேற்படி தொழிலாளர்களின் தொழிலுக்காக கடலுக்கு செல்லும் கடற்கரை வீதியை ஆக்கிரமித்து நேற்று முன்தினம் (16) முள்ளுக்கம்பி வேலி அமைத்தனர்.

குறித்த வேலிக்குள் கடற்றொழிலாளர்களின் வாடிகளும் அகப்பட்டுக்கொண்டன.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இவ்விடயத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி கே.சுகாசின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (17) தொழிலாளர்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் சகிதம் சுகாஸ் குறித்த இடத்திற்கு சென்றார்.

அங்கு முகாமிட்டுள்ள கடற்படை பொறுப்பதிகாரியிடம் நிலமையை விளக்கிய அவர், குறி;த்த பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக நிலம் என்பதையும் அது தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு உரியது என்பதையும் எடுத்துக்கூறினார்.

இனிமேல் அங்கு எல்லையிடவோ முள்ளுக்கம்பி வேலியிடவோ வேண்டாம் என கடற்படையினருக்கு கூறிய சட்டத்தரணி சுகாஸ், மீறி செயற்பட்டால் தாங்கள் நீதிமன்றுக்கு செல்வதுடன் மக்களோடு இணைந்து ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, அது அரச காணி எனவும் அரசாங்கம் தமக்கு அதை வழங்கியதால் தாம் எல்லையிட்டனர் எனவும் கடற்படை அதிகாரி தெரிவித்தார். எனினும், அது மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் என்பதால் கடற்படையினருக்கு வழங்க அனுமதிக்க முடியாது என சுகாஸ் உறுதிபடக் கூறினார்.

இது தொடர்பாக வலி.மேற்கு பிரதேச செயலாளர் ஊடாக தங்களுக்கு அறிவிக்குமாறும் தாம் எல்லையிட்டு வேலி அமைக்கும் பணியை கைவிடுவதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். தமது பாதை உரித்தை மீளப்பெற்று வழங்கிய சட்டத்தரணியும் வேட்பாளருமான சுகாஸிற்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here