கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்களுக்கு உதவ சீனா மருத்துவ பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் நேற்றுமுன்தினம் இரவு (வெள்ளிக்கிழமை ) பெல்ஜியத்தின் லீஜி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பல திணறிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் சீனாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டதை அந்நாடு அறிவித்திருக்கிறது.
கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்தினார்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு சீனா மற்றைய நாடுகளுக்கு உதவத் தயாராகியிருக்கிறது.
இதன் அடிப்படையில், ஜாக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களால் இந்த பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவை அங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பப்படும்.
இரண்டு தொண்டு நிறுவனங்களும் மொத்தம் இரண்டு மில்லியன் முகமூடிகள் மற்றும் சோதனைக் கருவிகள் போன்ற பிற முக்கியமான பொருட்களினை நன்கொடையாக அளித்து வருகின்றன.
இதேவேளை சீன மருத்துவக் குழுவொன்று இத்தாலிக்கு நேரடியாக மருந்துகள், சோதனை கருவிகளுடன் பயணித்துள்ளனர்.