எம் நெஞ்சில் நிழலாய் இருப்பவன் பவுஸ்ரின்: 1 ஆம் ஆண்டு நினைவில்! 

0
767

உடலைவிட்டு பிரிந்து உணர்வால் எம் இதயத்தில் நிற்கும் ஓர் உன்னதன் நாட்டுப் பற்றாளர் பவுஸ்ரின்!

        தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தாயகத்தில் சில வருடங்கள், பின்னர் புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் பணியாற்றியவன். நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் இழப்பு இன்றைய காலச்சூழ்நிலையில் பேரிழப்பு.  அஜனபாகு போன்ற வலிமையான உடலும், குழந்தை போன்ற மென்மையான மனதும் கொண்டவர் அவர். தனது விடுதலை அவாவும், வேட்கையும் தன்னோடு போய்விடக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாகத் தனது பிள்ளைகளுக்கு மாவீரர்கள் பெயர்களைச் சூட்டி அழைத்து அழகு பார்த்தவர். எந்தத் தேசிய நிகழ்வும் தவறவிடமாட்டார். எப்பொழுதும் நிகழ்வின் இறுதிநேரத்தில் அவர் வருகை இருக்கும் அதற்கு யார் எதைச்சொன்னாலும் ஒரு சிரிப்பும் அமைதியான பார்வையும் தான் அவரது செயற்பாடு, சிலவேளைகளில் சில விடயங்களில் சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை நாம் அவரிடம் கற்றுக்கொண்டோம். ஒருமுறை சாதுமிரண்டால் காடுகொள்ளாது என்பதை அவரிடம் கண்டோம். தொலைபேசியில் தேசிய மாவீரரையும் போராட்டத்தையும் விமர்சித்து ஒரு குறுஞ்செய்தி ஒருவர் போட்டிருந்தார். அதை நண்பர் மூலம் பார்த்தவர் உடனே அந்தத் தொலைபேசியை நிலத்தில் அடித்து உடைத்துக் காலால் மிதித்ததையும் நண்பர் தெரிவித்திருந்தார். அதை அவரிடம் கேட்டபோது நான் செய்தது பிழையா அண்ணா என்றுதான் கேட்டார். இன்று அவர் இருப்பாராக இருந்தால், பலரின் கைகளில் தொலைபேசியே இருந்திருக்காது இவ்வாறு பலதடவை கோபப்பட்டதைப் பார்க்கும்போது அது நியாயமான கோபமாகவே இருந்தது. மூன்று தசாப்தமாக அவருடைய செயற்பாடுகள் அர்ப்பணிப்பு மிக்கதானது. யாரிடமும் பண்பும், பணிவும், கொண்ட அணுகுமுறையும் அவமானப்பட்டாலும் திரும்பத் திரும்பச் சென்று அதைச்சரி செய்கின்ற பண்பு இருந்தது. கடந்த 30 வருடங்களாக விடுதலைக்கான பணியில் பயணித்த பலரைப் பார்த்திருக்கின்றோம்; இன்னும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இப்படியும் சில மனிதர்களா? என்று நினைக்க வைக்கும் சிலர், இப்படியும் ஒரு மனிதனா என்று  நினைக்க வைக்கும் ஒருவனாக பவுஸ்ரின் அவர்கள்  வாழ்ந்திருக்கின்றார். விடுதலைப் பாதையில் வரலாறு பதித்தவர்கள் அதற்குரிய மரியாதையை அவர்கள் சாவடையும் போதாவது பெற்றுக் கொள்கின்றார்கள். அந்தவகையில் தான் பவுஸ்ரின் தமிழீழத் தேசத்தின் உயர் விருதான நாட்டுப்பற்றாளர் என்ற உயர் மதிப்பை உரிய மரியாதையுடன் உரியவர்களால் பெற்றுக்கொண்டார்.

        மாவீரர்கள், பொதுமக்கள், தமிழீழத் தேசியம், தேசியத் தலைவர் என்பவற்றை யாருக்கும் அவர் விட்டுக்கொடுத்ததில்லை. அதேபோல் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவையும் யாருக்கும் அவர் அடகுவைத்ததும், விட்டுக்கொடுத்ததும் கிடையாது .2007 இல் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் சக பணியாளர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டபோது, கொஞ்சம் கூட பின்நிற்காது மற்றும் சிலருடன் உறுதியாக நின்று பணியாற்றியவர் பவுஸ்ரின். பயத்தின் காரணமாக பலர் வெளியில் போனார்கள். இறுதிவரை தாய்வீட்டைத் திரும்பிப் பார்த்ததும் கிடையாது. அது அவரது மனதில் ஆழமாகப் பெரும் அதிருப்தியாக சாவடையும் வரை இருந்திருந்தது. 

‘ நத்தையின் முதுகில் கூடு இருக்கின்றது என்பதால் அது தன் கடமையைச் செய்யாமல் இருப்பதில்லை” என்பதுபோல் பவுஸ்ரின் தனது கடமையை இறுதி வரை செய்திருந்தார்.

நண்பனே நீ வாழ்ந்த வரை மற்றவர்களை நினைத்தாய்; அதற்காய் உழைத்தாய். இன்று மீளாத துயரத்தில் எம்மை விட்டு விட்டுச் சென்றுவிட்டாய். நாம் மீளாத துயரை எண்ணிப் பார்க்கையில் தலைநிமிர்வான உனது பணிகளும், நினைவுகளும் எம்மை இன்னும் வழிநடத்திச்செல்ல உதவுகின்றன. 

  தேசவிடுதலைப் பணியாளர்கள்,  சகதோழர்கள்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here