15 பேர் கொண்ட சி.ஐ.டி குழு யாழ்ப்பாணம் விரைவு!

0
162

11146493_1585350305080079_4049695559119240292_nநீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கென குற்றப் புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட (சிஐடி) குழுவினர் யாழ்ப்பாணம் விரைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் அமைதியின்மையை தோற்றுவிப்பதற்காக ஏதேனும் தேசவிரோத சக்திகள் இந்த சம்பவத்தின் பின்னணியிலிருந்து செயற்படுகிறதா என்பதனை மையப்படுத்தியதாகவே இதன் விசாரணைகள் அமையுமென்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இந்த விசாரணைகளின் முதல் கட்டமாக, நீதிமன்ற கட்டடத் தொகுதியின் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தனிநபர்களின் ஆள் அடையாளத்தை சிஐடியினர் உறுதிப்படுத்தவுள்ளனர்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தம்வசம் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் வைத்திருப்போர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு யாழ். மஜிஸ்ட்ரேட் பி. சிவக்குமார் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்யா (18) என்னும் பாடசாலை மாணவி காமுகர்களால் கடத்தப்பட்டு, வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதன் விளைவாகவே நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்டதுடன் யாழ். நகரில் பதற்ற நிலை உருவானதாகவும் நம்பப்படுகின்றது. எனினும் வித்யாவின் கொலையைக் காரணமாக கொண்டு சில தீயசக்திகள் பின்னணியிலிருந்து செயற்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

விசாரணைகளின் இறுதியில் உண்மை கண்டறியப்படுமென்றும் இதற்கு யாழ். மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here