வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினில் பொதுமகனொருவர் படுகாயமடைந்துள்ளார்.உடுத்துறை ஒன்பதாம் வட்டாரப்பகுதியினில் இடம்பெற்ற இச்சம்பவத்தினில் வேலன் சிவபாதசுந்தரம் (56 வயது) எனும் குடும்பஸ்தரே துப்பாக்கி சூட்டுக்குள்ளாகியுள்ளாதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அப்பகுதி அமைப்பாளர் காண்டீபன் தெரிவித்தார்.
அப்பகுதியினில் சட்டவிரோத மதுபாவனையை கண்டுபிடிக்கப்போவதாக புறப்பட்டு போன பொலிஸ் அணியினரே துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.சுமார் 15 பேர் வரையிலான பொலிஸார் அங்கு நின்றிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏதிர்பார்த்தது போன்று சட்டவிரோத மதுபானம் அகப்பட்டிராத நிலையினில் கணக்கு காட்ட அங்கிருந்த குடும்பஸ்தர்களுள் ஒருவரான வேலன் சிவபாதசுந்தரம் (56 வயது) என்பவரை கைது செய்யமுற்பட்டுள்ளனர்.அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டுள்ளனர்.
அதனையடுத்து ஏற்பட்ட குழப்பத்தினிலேயே பொலிஸார் சகட்டு மேனிக்கு துப்பாக்கி பிரயோகம் செய்ததினில் குறித்த நபர் நெஞ்சினில் படுகாயமடைந்துள்ளார்.
முன்னதாக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையினில அனுமதிக்கப்பட்ட சிவபாதசுந்தரம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.