நோர்வேயில் முடிதிருத்தகம் முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்தும் மூடப்படுகின்றன!

0
643


கொரோனா வைரஸின் பரம்பலை கட்டுப்படுத்த நோர்வே, இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னரான மிகப்பெரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது.

மக்களை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும், இறப்புக்களை தவிர்க்க முடியாமல் போகலாம் என்றும் பிரதமர் எர்னா சொல்பேர்க் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

இதனடிப்படையில் நாட்டின் பெரும்பாலான சமூக கட்டமைப்புக்கள் மூடப்படுவதோடு மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்து தரத்திலான பாடசாலைகள், சிறுவர் நல காப்பகங்கள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன-

அனைத்துவித கலை கலாச்சார நிகழ்வுகளும் ரத்து செய்யப்படும். தலை முடி திருத்தும் சலூன்கள், மசாஜ் நிலையங்கள் அழகியல் சலூன்கள், நீச்சல் தடாகங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக மூடப்படுகின்றன.

போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும். ஆனால் மக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவமனைகள், முதியோர் காப்பகங்கள் போன்ற இடங்களுக்கு பொது மக்கள் செல்வதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதோடு சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஸ்கண்டிநேவிய நாடுகள் தவிர்ந்த உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இருந்து நோர்வேக்கு திரும்பி வருவோர் நோய் அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயமாக 14 நாட்கள் வீடுகளில் இருக்கவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு 27 ஆம் தேதி பெப்ரவரி மாதம் முதல், அதாவது பின்னோக்கிய விதத்தில் அமலுக்கு வரும் என்றும் அரசாங்க அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு ஏப்ரல் மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் இருக்குமென்றும் பொருட்களை வாங்கிக் குவிப்பதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. கடைகள் திறந்திருக்கும் என்றும் அத்தியாவசிய சேவைகள் இயங்கும் என்றும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை மார்ச் மாதம் 12ம் தேதி பிற்பகல் 6 மணி முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமுலுக்கு வரும். தொற்று நோய் தவிர்ப்பு சட்டத்தின் கீழ் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும்.இந்த கட்டுப்பாடுகள் முதல் கட்டமாக மார்ச் 26 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here