அந்நிய நாட்டு பிரஜைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முழு கதவடைப்பு இடம்பெறுகிறது.

கதவடைப்பு காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கோறனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்தக் கதவடைப்பு இடம்பெறுகிறது.
கதவடைப்புப் போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்படுகின்றது.
பாடசாலைகள் இயங்குகின்றபோதிலும் மாணவர்களின் வரவு குறைவான நிலையிலேயே இருப்பதை காணமுடிகின்றது. அரச அலுவலகங்கள் இயங்குகின்ற நிலையிலும் மக்களின் வரவு குறைவாக காணப்படுவதன் காரணமாக அரச அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெறுகின்றபோதிலும் உள்ளூர் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் சிறிலங்கா போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இத்தாலி,ஈரான்,கொரிய நாட்டில் இருந்துவரும் பயணிகள் மட்டக்களப்பு பல்கலைக் கழகத்திற்குக் கொண்டுவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு அவர்களில் கொறனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டு பிரஜைகளை கொரனாவில் இருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் வெளிநாட்டவர்களை அழைத்துவந்து பராமரிக்கவேண்டிய தேவை எமக்கு இல்லை எனவும் –
இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொறனா தொற்று ஏற்பட்டால் இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்தத்தில் இருந்து எமது மாவட்டத்தினை பாதுகாக்க வீட்டுக்குள் முடக்கி வீதிகளை வெறிச்சோடச்செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் எனவும்- தமிழ் உணர்வாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.