கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலி முழுவதும் சிகப்பு மண்டலமாகப் பிரகடனம். நாடு தழுவிய அவசரநிலை முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வரை இத்தாலியில் 9 ஆயிரத்து 172 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளதுடன், 463 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்ததால் இத்தாலி மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“எதிர்காலம் நம்மைப் பொறுத்தது, எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும். மக்கள் அனைவரும் வீடுகளில் தங்கியிருக்குமாறு வேண்டுகின்றேன் ” என இத்தாலியப் பிரதமர் யூசேப்பே கோன்டே நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்.
வேலை மற்றும் மருத்துவ தேவைகளைத் தவிர்த்து மக்கள் வீட்டை விட்டு வேளியேற வேண்டாம் என்றும், நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவது ஏப்ரல் 3 வரை நீட்டிக்கப்படுவதாகவும்,பொது போக்குவரத்து தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.
சமூகத்தின் மிகவும் பலவீனமான உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கான இந்த நடவடிக்கைகள் இன்று 10.03.2020 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.