தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ரோசையா ஏற்றுக் கொண்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனாம் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
தற்போது கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது. இதனால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று காலை நடைபெற்ற அண்ணா திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஜெயலலிதா, சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் ஆளுநர் ரோசையாவை நேரில் சந்தித்த பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரோசையா ஏற்றுக் கொண்டார்.
கடந்த 2001ஆம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதும் இதேபோல் முதல்வர் பதவியை தற்காலிகமாக பன்னீர்செல்வம் வகித்து வந்தார். பின்னர் ஜெயலலிதா அந்த வழக்கில் விடுதலையானதும் தமது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.