நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் நோயினால் நேற்று சனிக்கிழமை மதியம் வரை 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இன்று அது 265 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது .
எனவே ஒரு சில நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு நம்புகின்றது .
கொரோனா வைரஸால் ஆரம்பத்தில் அடையாளம் காணப்படட 86 வயதுடைய வயோதிபர் கடந்த வியாழக்கிழமை அன்று ரொட்டர்டாமில் உள்ள இகாசியா வைத்தியசாலையில் உயிரிழந்தார். இன்று 82 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகமானோர் விடுமுறைக்கு இத்தாலிக்கு சென்று திரும்பி வந்தவர்கள் என்று கூறப்பட்டது.
சளி, இருமல் அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் சமூக தொடர்புகளை மட்டுப்படுத்துமாறு நெதர்லாந்தின் வடக்கு பிரபாண்டில் வசிப்பவர்களுக்கு தேசிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கான தேசிய நிறுவனம் (ஆர்.ஐ.வி.எம்) தெரிவித்திருக்கிறது. நடைமுறையில் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
இதேவேளை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமது ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் 750 நிறுவனங்கள் வேலை நேரத்தைக் குறைக்க வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தாம் அதனைப் பரிசீலித்து வருவதாக சமூக விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை கைகழுவும் கிருமி தொற்று நீக்கி மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
(நெதர்லாந்தில் இருந்து பிரதீபன்)