முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு செல்வபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றது.
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றோடு நான்காவது ஆண்டை அடைகின்றது.
இதனை முன்னிட்டு இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினமான இன்று இந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையைக் கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுத்திருந்தனர்.
மேலும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உள்நாட்டு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்ததோடு, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இருந்தனர்.
குறித்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு வர்த்தக சங்கம், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம், உடையார்கட்டு வர்த்தக சங்கம், விசுவமடு வர்த்தக சங்கம், முள்ளியவளை வர்த்தக சங்கம், ஒட்டுசுட்டான் வர்த்தக சங்கம், மாங்குளம் வர்த்தக சங்கம், மல்லாவி வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து வர்த்தக சங்கங்களும் வர்த்தக நிலையங்களைப் மூடி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.