தமிழிற்காய்த் தனையீந்த பெருந்தகை பேராசிரியர் அறிவரசன் அவர்களுக்குக் கண்ணீர் வணக்கம்!

0
233

தமிழிற்காய்த் தனையீந்த பெருந்தகை
பேராசிரியர் அறிவரசன் அவர்களுக்குக் கண்ணீர் வணக்கம்!

தமிழ்மீது தீராக்காதல் கொண்ட பேரறிஞராக, தமிழின உணர்வாளராக, தமிழீழத் தேசியப் பற்றாளராக, தனித்தமிழ் இயக்கப் போராளியாகத் தள்ளாத வயதிலும் தளராது பணியாற்றிய பேராசிரியர் அறிவரசன் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து கலங்கிநிற்கின்றது தமிழ்க் குமுகம்.
தொன்மையும் இனிமையும்மிகு எம் தமிழ்மொழியில் வேற்றுமொழியின் கலப்புக்கண்டு கலங்கி, அதற்கெதிராகக் குரல்கொடுத்து, தமிழ்மொழியின் தனித்தியங்கும் ஆற்றலை ஐயந்திரிபற உறுதிப்படுத்திக்காட்டி, தனித்தமிழ் இயக்கப் போராளிகளில் ஒருவராகத் தன்னை இணைத்துக்கொண்டு, அப்பெரும் பணியையே தன் வாழ்வின் உயர்நோக்காக வரித்துக்கொண்டு வாழ்ந்துகாட்டிய மகத்தான மனிதர் இவர்.
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளராய் எம் தேசியத் தலைவரின் சிந்தையில் இடம்பிடித்து, அவரின் அழைப்பையேற்று எம் தாயகத்தில் கால்பதித்துத் தங்கிநின்று, களத்தில் நின்ற போராளிகளுக்குத் தமிழ்ப்பாலூட்டி ஈழப்போராட்ட வரலாற்றிலும் தனிப்பெரும் ஆளுமையாய் திகழும் பைந்தமிழ்ப் பகலவன் இவர்.
புலம்பெயர் தேசங்களில் எம்மிளந்தலைமுறையினரின் கைகளில் தவழும் வளர்தமிழ்ப் பாடநூல்களின் ஆக்கத்தில் இணைந்து, அவற்றைச் செழுமைப்படுத்திய சீராளர் இவர். தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஆசிரியர் செயலமர்வில் சிறப்பு வளவாளராய்ப் பங்குபற்றித் தமிழ்ச்சோலை ஆசிரியர்களின் வாண்மை மேம்பாட்டிற்கும் அணிசெய்த பேராளர் இவர்.
தரணியெங்கும் தனித்தமிழின் மணம் பரவவேண்டுமென்ற பேராவலின்பால், தன் இறுதிக்காலம் வரை தன்வயதைப் புறந்தள்ளி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் அவுத்திரேலியாவிற்கும் வலசை சென்றுவந்த பறவை இவர். தமிழ்நிழல் பரப்பி, புலம்பெயர் தேசங்களிலும் விழுதெறிந்த ஆலமரம் இவர்.
பேராசிரியர் அறிவரசன் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து திகைத்துநிற்கும் தமிழ்ச்சோலைக் குமுகம், அவரின் இழப்பால் தவித்து நிற்கும் உறவுகளின் துயரில் கண்ணீருடன் பங்கெடுத்துக்கொள்கின்றது.

திரு. க. ஜெயகுமாரன்

பொறுப்பாளர்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here