தாயகத்தில் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு சிறப்புத் தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் சாவடைந்துள்ளார்.
அவருடைய புனித உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானம் செய்யப்பட்டுள்ளது.
போர் நடைபெற்ற போது வன்னிக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசான்களில் ஒருவராகிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் என்றழைக்கப்படும் மு.செ.குமாரசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக இருந்த திரு.தமிழேந்தி அவர்களுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டுவரை வன்னியில் பல்வேறு மொழிச் செம்மைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அதேபோல் பெருமளவான போராளிகளுக்கு தமிழ் கற்பித்திருந்தார். அந்த அனுபவங்களை “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழத் தேசிய மலர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் மற்றும் கைக்கடிகாரம் என்பன வழங்கப்பட்டமையும் . அவற்றை இறக்கும் வரை அணிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டின் நெல்லை ஆழ்வார் குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், “புத்தன் பேசுகிறான்” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ் அறிவோம்” என்ற பெயரில் இலக்கணம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். இராவண காவியத்தையும் இவர் இலகு நடையில் எழுதியுள்ளார். பிரான்சில் பலதடவைகள் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வருகை தந்து பட்டையக் கற்கை நெறி மாணவர்களுக்கு தமிழ் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரான்சில் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் தனது உரையில் தாய்தமிழ்நாட்டில் போராசிரியராக இருந்த போது கிடைக்காத சந்தோசத்தை இப்பொழுது தான் அடைகின்றேன் என்றும். காரணம் இன்று பட்டத்தை பெறும் பலர் தன்னிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாது உங்களால் தான் இந்த பேறைப்பெற்றிருக்கின்றோம் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு தான் சொல்லிக் கொள்வது இந்த சரித்திர நிகழ்வை ஏற்படுத்தித்தந்ததும், தமிழீழத்திலும் பல பிள்ளைகளையும், புலத்தில் உங்களைப் போன்றவர்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையுடன் ,இணைந்து உருவாக்குவதற்கு காரணமானவர் எங்கள் தமிழர்கள் மனதில் என்றும் நிறைந்திருக்கும், தமிழர்கள் வாழ்வுக்கும், வீரத்திற்கும், உயர்வுக்கும் காரணமான நான் விரும்பும் தமிழீழத் தேசியத்தலைவர் தான் காரணம் என்பதை இந்த இடத்தில் சொல்வதில் பெருமையடைகின்றேன் என்றபோது அரங்கமே கரவொலியால் சிறிது நேரம் நிறைந்து போயிருந்தமை இன்று நினைவிற்கொள்ளத்தக்கது.
பாளையங் கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார். இவருக்கு பகுத்தறிவாளர் கழகம், “தமிழிசை பாவாணர்” என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில், “பைந்தமிழ் பகலவன்” என்ற பட்டத்தையும் வழங்கி மதிப்பளித்துள்ளன.
இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துசெல்வி, தமிழ்செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வநம்பி, தினமணியின் அம்பாசமுத்திரம் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வரும் அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
இவருடைய புனித உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது.