பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டிப் பிரதேசத்தில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் நேற்று 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.30 மணிக்கு தாய்நிலத் தமிழர்களின் பட்டறிவைப்பேசும் “ புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் ரிரிஎன் தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கினை நூலின் ஆசிரியர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும், மற்றும் பொண்டித் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன், கவிஞர் படைப்பாளி திரு.நகேசு மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேசு, பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா, செயற்பாட்டாளர் ஆசிரியர் சத்தியதாசன், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் சார்பாக திரு. அகிலன், தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.பாலகுமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர். வரவேற்புரையை ரிரிஎன் தமிழ்ஒளி சார்பாக திருமதி கோகுலதாசன் ஜோதி அவர்கள் ஆற்றியிருந்தார். வரவேற்பு நடனத்தினை புளோமெனில் தமிழ்ச்சோலை மாணவிகள் வழங்க திறான்சி தமிழ்ச்சோலை மாணவி;, ஆதிபராசக்தி நாட்டியப்பள்ளி மாணவி ஆகியோரின் நடனங்களும் இடம்பெற்றிருந்த3.2020ன. நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையினை எழுத்தாளர் செல்வி மீனா அவர்கள் வழங்க நூல் அறிமுக உரையினை திரு. த.கேசவநந்தன் அவர்கள் ஆற்றியிருந்தார். கருத்துரைகளை ஊடகவியலாளர் திருமதி கவிதா அவர்களும், ஆசிரியர் திரு.அகிலன், ஆசிரியர் திரு. பாஸ்கரன் அவர்களும், மதிப்பீட்டுரையை ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்களும் வழங்கினர். நட்புரையாக பொண்டி மாநகரசபை உதவி முதல்வர் கலந்துகொண்டு உரையும் ஆற்றியிருந்தார். தமது மண்ணில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை மறந்து போகாமல் அதனை ஓர் ஆவணமாக எழுதி வரலாற்று நூலின் மூலமாக வெளிவிடுவது மிகப்பெரிய சிறப்பு என்றும் இவை ஒரு வரலாற்று ஆவணமும் அடுத்து வரும் தலைமுறை தமது இனத்துக்கு நடந்தவற்றை உண்மையின் சாட்சியாக அறிந்துகொள்ள இவை பெரும் ஆவணமாக இருக்கும் என்பதையும் ஈழத்தமிழ் மக்கள் போல தானும் கூட ஓர் இனத்தில் பல்வேறு துன்பங்களைம் நெருக்கடியையும் சந்தித்தவன் என்பதையும் கூறியிருந்தார். நூலின் முதற்படியை முன்னைநாள் தமிழீழ பெண்கள் ஆய்வு நிறுவனப் போராளி திருமதி சுபா திலீபன் அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேசு அவர்களும், திருமதி நந்தினி யவான் அவர்களும் பெற்றுக்கொள்ள ஏனைய கட்டமைப்பின் பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ரிரிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் சார்பாக திரு.றூபன் அவர்களும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக திரு. மகேசு அவர்களும் இணைந்து நூலாசிரியர் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. அத்தோடு, நடைபெற்ற உண்மைச்சம்பவங்களையும், விடுபட்டுப் போனவற்றை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி எழுதவேண்டும் என்றும் நேரில் பார்த்தவர்களும், வாழ்ந்தவர்களும், உண்மையின் சாட்சியங்களை வெளிகொண்டுவராது இருப்பதும் உண்மையும் உயிர் ஈகமும் செய்த வரலாற்றை சம்பந்தமில்லாதவர் அனுபவிக்காதவர்கள், காணாதவர்கள் மனம் போன போக்கில் கற்பனையில் எழுத வழிவகுத்து விட்டுவிடும் என்று தொடர்ந்தும் எழுதவேண்டும் என்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் கேட்டுக்கொண்டார். நிறைவில் நூலாசிரியர் ஆதிலட்சுமி சிவகுமார் உரையாற்றும்போது தன்வாழ்வில் கண்ட உண்மைகளைபப் பாத்திரமாக்கி எல்லோரும் விளங்கிக்கொள்ளும் வகையில் தான் எழுதியதையும் இந்த நூல் ஆக்குவதற்கு நீண்ட காலம் தனக்குத் தேவைப்பட்டிருந்ததையும் ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து செதுக்கப்பட்டது என்றும் இந்த வரலாறுகளை இன்றைய வாழும் மக்களும், அடுத்த தலைமுறைகளும் தெரிந்தும், அறிந்தும் கொள்ளவேண்டும் என்றும் தன்னால் முடிந்த அளவு எமது அடுத்த தலைமுறையினருக்கு இவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். அந்தப் பணியை இனிவரும் காலங்களில் தான்செய்ய உள்ளதாகவும் கூறினார்.
ஓர் உண்மையின் வரலாற்றின் சாட்சியாக நிற்கும் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் இந்த புள்ளிகள் கரைந்தபொழுது என்ற நூலினை வாசிப்பவர்கள் தொடர்ந்து தமது விடுதலைப்பாதையில் இன்னும் மன வைராக்கியத்தையும், விடுதலை அடையும் இறுதிவரை உழைக்க வேண்டும் என்ற உறுதியையும், ஊட்டத்தையும் அளிக்கும் ஒரு நூலாகவே இது இருக்கும் என்பதை நூலினை வாசித்து கருத்துரைகள் வழங்கியவர்களின் உரைகள் உணர்த்தியிருந்தன. தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உறுதியுரையுடன் நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)