வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு வடக்கு மாகாண சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் இன்று நடைபெற்றிருந்தது.இந்தநிலையில் புங்குடுதீவில் வன்புணர்விற்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவிற்கு ஏகமனதாக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன், அமைச்சர்களான கல்வி அமைச்சர் குருகுலராசா, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன், உட்பட பலரும் அஞ்சலி உரைகளினை நிகழ்த்தியிந்தனர்.
இதனிடையெ யாழ். நகர் மற்றும் நீதிமன்ற சூழலிலும் காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் தொடர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.நேற்று இடம்பெற்ற வன்முறையினை அடுத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புங்குடுதீவு சிறுமியின் படுகொலையுடன் தொடரபுடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட நபரும் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போன்று வித்தியாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு நடைபெறுகின்றது. வவுனியா நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்படும் அதேவேளை பரவலாக காவல்துறையினரும்; குவிக்கப்பட்டிருந்தனர். நகருக்கு வரும் சில வீதிகளில் ரயர்கள் போட்டு எரியூட்டப்பட்டுள்ளது. வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரப் பகுதியில் அமைதியான முறையில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்கியிருக்கவில்லை.