கடந்த ஜனவரி 10- ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பேரணி நடத்தினார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.
இந்நிலையில் டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மத்தியில் நடைபெற்ற வன்முறையில் ஏற்கனவே 27 பேர் உயிரிழந்த நிலையில் வன்முறையில் படுகாயமடைந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதனால் தற்போது டெல்லி வன்முறை உயிரிழப்பு 30 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில், கலவரத்தால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், சாக்கடைக்குள் இருந்தும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல உடல்கள் இப்படி, கிடக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
சாந்த் பக் ஏரியாவில், அங்கித் சர்மா என்ற 26 வயதான நபர் கல்வீசி கொல்லப்பட்டு, சாக்கடைக்குள் வீசப்பட்டார். இவர், மத்திய உளவுத்துறையில், டிரைவர் பணியில் இருந்தவர். இதையடுத்து சாக்கடை கால்வாய்களில் மேலும் பலர் கொன்று வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். கங்காவிகார் ஜோரிபூர் என்க்ஸ்டென்சன் பகுதியில், இவ்வாறு இரு சடலங்களை சாக்கடை கால்வாய்களுக்குள் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.
இதேபோல தார் ஊற்றி வைக்கக் கூடிய சாலையோர டிரம்முக்குள் எரிந்த நிலையில், ஒரு சடலம் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. இப்படி யார் கண்ணிலும் படாமல் சடலங்கள் ஆங்காங்கு இருக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. எனவே கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றார்கள்.