புலம்பெயர் அமைப்புகளாகிய நாங்கள் பல ஆண்டுகளாக இலங்கையை கண்காணித்து வருகின்றோம். அந்த அடிப்படையில் எம்மைப் பொறுத்தவரையில் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வது இல்லாவிட்டால் இலங்கைக்கான விசேட தீர்ப்பாயமொன்றை உருவாக்குதல், சர்வதேசத்தின் ஊடாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்று அனைத்துலக ஈழத்தமிழர் பேரவையின் பொதுமக்கள் தொடர்பதிகாரி திருச்சோதி தெரிவித்தார்.
ஜெனிவா வளாகத்தில் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நேர்காணல் வருமாறு:
கேள்வி: ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியுள்ளமை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என உங்கள் அமைப்பு கருதுகிறது?
பதில்: இலங்கை அரசு 2015இலிருந்து இணைந்த ஒரு பிரேரணையை கைச்சாத்திட்டது. இந்த கைச்சாத்திலிருந்து ஒருதலைபட்சமாக விலகுவதென்பது எந்த பக்கத்தில் நடைமுறைக்கு சாத்தியமென்ற ஒரு கேள்வி இருக்கின்றது. காரணம் இந்த பிரேரணை இலங்கை மட்டும் செய்யவில்லை. இதன் பங்குதாரர்களாக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் இணைந்து மேற்கொண்ட ஒரு கூட்டு ஒப்பந்தமாகும். இதிலிருந்து எப்படி, எவ்வாறு ஒருதலைபட்சமாக விலகுவது என்பது குறித்து இலங்கை அறிவிப்பது கேள்விக்குறியே. அதிலிருந்து எழும் பிரச்சினைகளையும் கேள்விகளையும் இவர்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றார்களா என்பதும் கேள்விக்குறியே.
கேள்வி: ஆனால் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக்கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார். இந்த முடிவின் தாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உங்களது தரப்பிலிருந்து ஏதேனும் முயற்சி முன்னெடுக்கப்பட்டதா?
பதில்: இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பதாகவே கடந்த 12ஆம் திகதியிலிருந்து பல்வேறு நாடுகளை சென்று சந்தித்து வருகின்றோம். சென்ற வாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சந்திப்பை மேற்கொண்டோம். எல்லா நாடுகளும் இந்த விடயத்தில் மிக அவதானமாக இருக்கின்றன. தாம் முன்வைத்த பொறுப்பு கூறலிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளன. சிறப்பு வரிச்சலுகையான ஜீ.எஸ்.பி பிளஸ் போன்ற அதிகாரிகளும் கூட இலங்கையில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களையும் தாம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உறுதிபட கூறியுள்ளன.
கேள்வி: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் சர்வதேச நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறானதாக அமையும்?
பதில்: இணை அனுசரணையிலிருந்து இலங்கை எளிதில் இதனை விட்டு வெளியேற முடியாது. இதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என சர்வதேச நாடுகள் உறுதிபட அறிவித்துள்ளன. காரணம் இரண்டு வருடங்களுக்கு இணைந்து எடுக்கப்பட்ட ஒப்பந்தம். அவ்வாறு விலகுவதாயின் மாற்று தீர்வு குறித்த பிரேரணையை இலங்கை முன்வைக்க வேண்டும். அந்த மாற்று பிரேரணையை முன்வைக்கும்போது அதன் பின்விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்து பின்னர் சிந்திப்பதாக தெரிவித்துள்ளன.
இலங்கை நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். அந்த பொறுப்புக்கூறல் இல்லாத பட்சத்தில் மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கின்றன.
கேள்வி: யுத்தம் முடிவடைந்த பின்னர் ஐ.நா.வில் பல ஆண்டுகளாக இந்த விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வருகின்ற நிலையில், இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டுமென ஒருதரப்பும் வேண்டாமென இன்னொரு தரப்பும் கூறிவருகின்றன. இது குறித்து உங்கள் அமைப்பின் கருத்து என்ன?
பதில்: சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் நிச்சயம் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல முடியும். மனித உரிமை சபையில் மட்டும் தீர்வுக்காக நிற்காமல் அதற்கு அப்பால் செல்ல வேண்டும். அதற்கான செயற்பாடுகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். மனித உரிமை சபை மாத்திரம் எமக்கு தீர்வல்ல. இதனாலேயே நாம் மனித உரிமை சபையோடு நின்றுவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். நாம் தொடர்ந்தும் இலங்கையை கண்காணித்து வருகின்றோம். மனித உரிமை சபையில் இலங்கை பிரச்சினை தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பது எமது வேண்டுகோள். இது இருந்தால்தான் இலங்கையை தொடர்ந்தும் எமது கண்காணிப்பில் வைத்திருக்க முடியும். எமது மக்களை பாதுகாக்க முடியும்.
கேள்வி: இந்த பிரேரணையிலிருந்து இலங்கை அரசு விலகினாலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் சிலவேளைகளில் மாற்று தீர்மானமொன்றை முன்வைக்கலாம் என்ற கருத்து நிலவி வருகின்ற நிலையில் அவ்வாறான தீர்வொன்றை முன்வைக்காத சமயத்தில் மார்ச் மாதம் ஐ.நா எவ்வாறான அழுத்தங்களை கொடுக்கும்?
பதில்: இலங்கை மாற்று தீர்வொன்றை முன்வைக்காத பட்சத்தில் இன்றிலிருந்து (நேற்று) மார்ச் 29 வரை என்னமாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை கண்காணித்து கொண்டுதான் ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளர் முன்வைக்கும் பிரேரணை அமையலாம். ஆனால் எதுவும் செய்யாத பட்சத்தில் ஐ.நா உயர்ஸ்தானிகர் அல்லது அவரை சார்ந்த அமைப்புகள் ஏதேனும் பரிந்துரைகளை முன்வைக்கலாம். இலங்கை அரசுக்கு கூறியதுபோல் கலப்பு விசாரணைக்குழுவை அமைக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணையை நோக்கி செல்ல வேண்டி வரலாம். அது இலங்கையின் செயற்பாடுகளை கொண்டே அமையும். புலம்பெயர் அமைப்புகளாகிய நாங்கள் பல ஆண்டுகளாக இலங்கையை கண்காணித்து வருகின்றோம். அந்த அடிப்படையில் எம்மைப் பொறுத்த வரையில் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வது இல்லாவிட்டால் இலங்கைக்கான விசேட தீர்ப்பாயமொன்றை உருவாக்குதல், சர்வதேசத்தின் ஊடாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். நாம் சந்தித்த அனைத்து நாடுகளும் கூட இலங்கைக்கு பொறுப்பு கூறல் இல்லாமல் எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாது என கூறியுள்ளன.
கேள்வி: புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் காணப்படும் ஒற்றுமை யில்லாத தன்மையை நிவர்த்தி செய்ய முடியாதா?
பதில்: ஒற்றுமை இல்லையென கூறிவிட முடியாது. ஒவ் வொரு அமைப்பினரும் ஒரு வழிப்பாதை யூடாக பயணிக்கின்றனர். அதே நேரம் நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் ஒரே சிந்தனை யுடன் பயணிக்கின்றோம். இருப்பி னும் எம்மிடையே காணப்படும் மாற்று சிந்தனைகளை ஒன்றி ணைத்து கொண்டு பயணிக்க தேவையான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றோம்.
(நன்றி:வீரகேசரி)