யாழ். நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள 129 பேருக்கும் 4 கட்டங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் ஜூன் மாதம், முதலாம் 3 ஆம், 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார் கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 43 பேருக்கு எதிராகவும் பாரிய குற்றச் செயல்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் 39 பேருக்கு எதிராகவும் பொலிஸாருக்கு கடமையை செய்யவிடாது இடையூறு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 33 பேருக்கு எதிராகவும், நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் 14 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவர்களுக்கு பிணை வழங்க சட்டத்தரணிகள் எவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
எனினும் 43 பேருக்கும் முறையே ஜூன் மாதம், 3 ஆம் திகதி வரையும் 39 பேருக்கு ஜூன் 4 ஆம் திகதி வரையும் 33 பேருக்கு ஜூன் 1 ஆம் திகதி வரையும் 14 பேருக்கு ஜூன் 1 ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறும் யாழ். நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை சிவகுமார் உத்தரவிட்டார்.
129 பேரும் சிறைச்சாலை வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது அவர்களது பெற்றோர் உறவினர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். எனினும் அவர்களை நீதிமன்ற வளவுக்கு வர பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.
மேற்படி 129 பேரும் நேற்று அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.