புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் இன்று புத்தளம் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
புத்தளம் தபால் நிலைய சுற்றுவட்டத்தின் முன்னால் காலை பத்து மணி முதல் பதினொரு மணிவரையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடன் தண்டனை வழங்க வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது போன்ற கோசங்களை எழுப்பினர்.
‘மனித விலங்குகளே உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?’ ‘இன்று வித்தியா. நாளை….?’ ‘சிறுவர் பெண்கள் உரிமைகளை உறுதிப்படுத்து’ ‘பெண்கள் பொம்மைகள் அல்ல’ ‘இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும் இந்தக் கொடுரம்?’ ‘அரசே குற்றம் புரிய நினைப்பவர்களுக்கு மரண பயத்தை உண்டாக்கு’ ‘பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களை தூக்கிலிடு’ ‘அரசே காம வெறியர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்து’ போன்ற பல்வேறு தமிழ் சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.