யாழில் இருவேறு இடங்களில் மாணவியர் இருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மாணவி நேற்றைய தினம் (04 ) பதினொரு மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மாணவியின் சடலம் இன்று (05) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாணவி தூக்கிட்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது-20) என்ற இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மாணவி, கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இளம் பராயத்தினர் இவ்வாறாக தற்கொலை செய்வது அண்மைக்காலமாக தொடர்கதையாகிவருகின்றது. பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் தினமும் பாடுபடும் நிலையில் பிள்ளைகள் இப்படியாக தவறான முடிவெடுப்பது வருத்தத்திற்குரியது.
அவ்வாறே இம் மாணவியின் பெற்றோரும் குடும்ப சூழலை பொருட்படுத்தாமல் மகளின் கல்விக்கு அயராது உழைத்துவந்த நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை மாணவியின் குடும்பத்திற்கு ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.