சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர தினம், தமிழ் மக்களின் கரிநாள் என தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சில அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
1956 இனக்கலவரம், 1983 கறுப்பு ஜூலை மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என தனது கட்டமைக்கப்பட்ட அழிப்பினை தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் அரசாங்கம் நடாத்தியது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
மேலும் இம்முறை இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என அரசாங்கம் அறிவித்திருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இராணுவத்தின் கைகளில் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட 20,000 இற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதியும் தமிழின அழிப்பின் சூத்திரதாரியுமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கும் இதன்போது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.