சிறீலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிலத்துக்குள் தேடுங்கள் என மிக எகத்தாளமாக கூறியுள்ளார்.இவரின் கருத்தை மிக மிக வன்மையாகக் கண்டித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி அவர்கள் அமைச்சரின் கருத்துக்கு எதிராக காணாமலாக்கப்பட்ட உறவுகளான தமது நிலைப்பாடு தொடர்பில் ஓர் ஊடக சந்திப்பை நேற்று மேற்கொண்டிருந்தார்.
இவ் ஊடக சந்திப்பில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்தை வன்மையாகக் கண்டித்ததுடன் 2009 மே 18 இல் சிறீலம்க்கா அரச படைகள் புலிகளை தோற்கடித்து வெற்றி விழா கொண்டாடிய நாட்களில் தான் எமது பிள்ளைகளையும் உறவினர்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தோம் என்ற கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்திருந்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகளே கொன்று புதைத்து விட்டார்கள் என்ற விமல் வீரவன்சவினுடைய கருத்து 2009ம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போதைய சனாதிபதியாகவும் விளங்குகின்ற கோத்தபாய ராயபக்ச மற்றும் ராயபக்ச குடும்பத்தைப் பாதுகாப்பதாகவே அமைகின்றது. 2009 மே 18 ம் திகதி வட்டுவாகலில் இருந்து ஓமந்தை வரை சிங்கள அரசு வெற்றிவிழா கொண்டாடியதை யாராலும் மறந்துவிட முடியாது.
அவ்வாறிருக்க புலிகளை அழித்து வெற்றிவிழா கொண்டாடிய சிங்க அரசாங்கத்தால் 2009 மே 18ம் திகதி சிங்கள இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகளை எப்படி புலிகள் கொண்டிருக்க முடியும்….??? ஓர் அமைச்சராக இருந்து இப்படி அப்பட்டமாக பொய் சொல்லுகின்ற இவர் இந்த நாட்டின் அமைச்சராக இருப்பதற்கே தகுதியற்றவராவார் எனவும் திருமதி ஈஸ்வரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல வருடங்களாக நீதி கேட்டு வீதிகளில் போராடி வருகின்ற இந்நிலையில் இவர்களை உளவியல் ரீதியில் தாக்கி கொலை செய்கின்ற படலத்தை இவ்வாறான விடயங்களினூடாக ராயபக்ச அரசாங்கம் அரங்கேற்றி வருகின்றது. நாம் கேட்பது யுத்தம் முடிவுற்று இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகளையே…!!!
“அவர்களை நிலத்துக்குள் தேடுங்கள்” என்று கூறுகிறீர்கள் என்றால் எமது உறவுகளை கொன்றது யார்…??? உங்களிடம் உயிருடன் கையளித்த எம் உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதிலை தான் நாம் எதிர்பார்க்கின்றோமே தவிர அரசாங்கம் வழங்கும் மரண சான்றிதலையோ அல்லது மாதாந்த உதவிப் பணத்தையோ எதிர்பார்க்கவில்லை.
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்ற இவ் வேளையில் இச் சுதந்திர தினத்தை நாம் எந்நிலையிலும் சுந்திர தினமாக ஏற்க முடியாது மாறாக ஈழத்தமிழர் வரலாற்றில் துயர்தோய்ந்த கரி நாளாகவே இச் சுதந்திர தினத்தை அனுஷ்டிக்க முடியுமென்பதையும் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றோம். தற்போது சிங்கள பேரினவாத அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கூறும் பொறுப்பற்ற செயற்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அனைவரும் விழிப்படைய வேண்டும். இன்று எமது உறவுகளுக்காக நாம் போராடுவதை போன்று நாளை எமது தமிழினம் தமது உறவுகளை தொலைத்து விட்டு வீதிகளில் போராடும் நிலையை மாற்றுவதற்காகவேனும் தமிழினம் ஒன்றுபட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை கண்டறிய ஒன்றிணைந்து குரல் கொடுக்க அனைவரும் முன்வாருங்கள்.