மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பேர்த் தடுப்பு முகாமில் இருந்து, இளம் இலங்கைக் குடும்பம் ஒன்றை நவுறுவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எட்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிய இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதிகள், பின்னர், நவுறு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தை பிறக்கவிருந்த நிலையில், மீண்டும் பேர்த்தில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர்.
தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்களான நிலையில், மீண்டும் நேற்று நவுறு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக, டார்வினில் உள்ள தடுப்பு
நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பேர்த் தடுப்பு முகாமில் இருந்து இவர்களை டார்வினுக்கு அனுப்புவதற்காக விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர்கள் சென்ற வாகனத்தை மறித்து அவுஸ்திரேலிய அகதிகள் உரிமைக்கான நடவடிக்கை வலையமைப்பை சேர்ந்த சட்டவாளர்கள் போராட்டம் நடத்தினர். எனினும், அவுஸ்திரேலிய காவல்துறையினர் அவர்களை பலவந்தமாக இழுத்துச் சென்று அகற்றிய பின்னர், இலங்கைக் குடும்பத்தினரை விமானம் மூலம் டார்வினுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்கள் உள்ளிட்ட 25 குடும்பத்தினரை அவுஸ்ரேலிய அரசு நௌரு தடுப்பு முகாமுக்கு அனுப்பவுள்ளது. எனினும், அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை எவரையும் நௌருவுக்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்துள்ளதால், டார்வின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.