பிரான்சு திரான்சி தமிழ்ச்சோலையின் தமிழர் திருநாள் விழா!

0
770

பிரான்சில் பாரிசின் புறநகர்பகுதியில் ஒன்றான திறான்சியில் பிராங்கோ தமிழ்ச்சங்கமானது தமிழர் திருநாளாம் தைப்பொங்கலினையும், தமிழர் புத்தாண்டினையும் சிறப்பாக கொண்டாடியது.

Gymnase Paul Langein அரங்கில் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கரும்புகள் கட்டப்பட்டு தமிழர் முறையாக நிறைகுடம் குத்துவிளக்குகளை சங்கத்தைச் சேர்ந்தவர்களும், தமிழ்ச்சோலை ஆசிரியர்களும் ஏற்றிவைக்க சங்கத் தலைவர் திரு. கணேசு தம்பையாஅவர்களும் நிர்வாகி திரு. முருகதாசன் அவர்களும் பொங்கல் பானை வைத்து பொங்கல் அரிசியும் இட்டனர்.

தமிழ்ச்சோலைக் குழந்தைகளுக்கு தமிழ் ஆசிரியர்கள் பொங்கல் பற்றியும் அதன் மகத்துவம் தமிழருக்குரிய ஒருநாள் என்பதையும் சொல்ல பிரதேசம் வாழ் தமிழ்க் குடும்பங்கள் அன்றைய கடும் குளிரையும் பொருட்படுத்தாது தமது கலாசார உடைகளுடனும் பிள்ளைகளுடனும் வந்திருந்தனர்.

மாநகர முதல்வர் Mme Lagarde succède  அவர்களும் வெளிநாட்டு மக்களுக்கு பொறுப்பானவர்களும் தமிழர்கள் தரப்பில் ஆலோசகராக பணியாற்றிவரும் திரு.அலன் ஆனந்தன் அவர்களும் தமிழ்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் பொறுப்பாளர் திரு. பாலகுமார்,செயலாளர் திருமதி அ.சுபத்திரா அவர்களும் திறான்சி தமிழச்சங்கத்தின் அழைப்பையேற்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் ஏனைய தமிழ்ச்சங்கத் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பொங்கல் நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் தமிழர்கள் புதுவருடத்தையும் பொங்கலையும் ஓர் இனத்தின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் மறந்துவிடாது வாழ்வதோடு தம்மோடு அழிந்துவிடாது அடுத்த தமது தலைமுறைக்கு எடுத்துச்செல்வது சந்தோசம் பாராட்டப்பட வேண்டியது என்றும். இங்கு வாழும் தமிழினத்திற்குதாம் எப்போதும் அனைத்துவழிகளிலும் பக்கபலமாக இருப்போம் என்பதையும்,வரப்போகும் உள்ளூராட்சித்தேர்தலும் அதில் தனக்குவலிமை பெற்றுத்தர தம்மால் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கும் திரு. அலன் ஆனந்தன் அவர்களுக்கு பலம்சேர்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவரின் துணைவர் செந்தெனி பிரதேச பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருபவர் தேசிய மாவீரர்நாள், மே 18 போன்றவற்றில் பங்கெடுத்துக் கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் கோலாட்டம், பொங்கல் நடனங்கள்,பாடல்கள் என்றும் கடந்த நாட்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வந்திருந்த பிரமுகர்களால் வழங்கப்பட்டன.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் பொங்கல் வாழ்த்தையும்,புதுவருட வாழ்த்தையும் தெரிவித்ததோடு உலகின் மூத்தமொழியாகவும், இனமாகவும் தமிழினம் இருந்துவருவதையும் அதேபோல உலகின் முதன்மை மொழியாகவும் இனமாகவும் இருக்கும் சீனமொழியும்,அந்த இனமும் இன்று தனது புத்தாண்டை கொண்டாட முடியாத நாட்களில் வைரசு வேதனையோடு நின்று கொண்டிருப்பதையும், தமிழர்களின் மூதாதையர்கள் தனியே பண்பாடு கலாசாரத்தோடு நின்றுவிடாது அந்த நிகழ்வுகளில் அவர்கள் கொண்டிருந்த பொருட்கள் சடங்குகளும் கூட எந்த வைரசையும்,அண்டையில் கூட வரவிடாது தடுத்து வைத்திருந்தது என்றும் அதனால் தான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகியும் அழியாது நிற்கின்றது என்றும் குறிப்பிட்டதோடு இன்று புத்தனின் பெயராலும், விபத்துக்களாலும், அனுதினமும் தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் வரும் மார்ச் மாதம் 9 ஆம் நாள் நடைபெறவிருக்கும் பேரணியில் அதிகமான மக்கள் இருக்கின்ற திறான்சி பிரதேச மக்கள் வழமைபோலவே அதிகமாக கலந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்ச்சோலையில் நீண்டகாலமாக ஆசிரியப்பணியை ஆற்றிவருகின்றவர்களையும் மதிப்பளிப்பும் செய்துவைத்திருந்தார். மாணவர்களையும், கலைதிறன் வெற்றியாளர்களையும் அசிரியர்கள், ஏனைய சங்கத்தின் தலைவர்கள், கட்டமைப்பின் பொறுப்பாளர்கள் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திரு. கிருபா, தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. மாறன் ஆகியோர் மதிப்பளிப்பு செய்து வைத்தனர். சின்னத் தலைமுறை பொங்கலினை கைகளால் ரசித்து ரசித்து உண்பது அழகாக இருந்தது. பல குழந்தைகள் தமக்கு இந்த உணவு நன்றாகப் பிடிக்கும் என்று கூறியிருந்தனர். இனிக்கும் இந்தத் தமிழ் பனிக்கும் குளிருக்குள்ளும் பண்பாடு மாறாது பயணித்தது இதில் பயணித்த அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளும் பரவசத்தையும் பண்பையும் பாரம்பரியத்தையும் குறியீடாக உணர்த்தி நின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here