நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற போது கேரளாவை சேர்ந்த 8 பேர் விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் அவர்களின் இறந்த உடல்கள் சொந்த ஊருக்கு விமானத்தில் வந்து சேர்ந்துள்ளன.
கேரளாவின் பாப்பனங்கோடு பொறியியல் கல்லூரியில் 2004-ம் ஆண்டு பி.டெக். முடித்த பிரவீன் கிருஷ்ணன் நாயர், ரஞ்சித் குமார் ஆகியோர் டெல்லியில் தங்களது கல்லூரி நண்பர்களோடு நடந்த ரீயூனியன் நிகழ்வில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
இந்த விழா முடித்த நிலையில், பிரவீன்-சரண்யா தம்பதியின் மூன்று குழந்தைகளும் ஜனவரி மாதம் பிறந்தவர்கள் என்பதால், அவர்களின் பிறந்தநாளை கொண்டாட நேபால் செல்ல திட்டமிட்டு பிரவீன்-சரண்யா தம்பதி மற்றும் ரஞ்சித் குமார் – இந்து லட்சுமி தம்பதியினரும் மற்ற சில நண்பர்களும் நேபால் சென்றுள்ளனர்.
காத்மாண்டுவில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள டாமன் பகுதியில் ஒரு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். குளிர் பிரதேசம் என்பதால் இரவு நேரத்தில் குழந்தைகள் குளிரால் கஷ்டப்பட்டனர் என விடுதி நிர்வாகத்திடம் வாயுக் குளிரூட்டி ஒன்றை வாங்கி வந்து அறையில் வைத்துள்ளனர்.
இரவு நேரத்தில் அதில் ஏற்பட்ட வாயு கசிவால் குழந்தைகள் உட்பட 8 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் 8 உடல்களினதும் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அவர்களின் சொந்த ஊரான திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சடலங்கள் கொண்டு வரப்பட்டன.
8 பேரும் சொந்த ஊருக்கு விமானத்தில் உயிருடன் திரும்ப பயண முன் பதிவு செய்திருந்த நிலையில் அவர்களின் உயிரற்ற உடல்கள் அதில் வந்து இறங்கியது குடும்பத்தாரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.