தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் வீறுநடைபோட்ட 1980களில் தமிழீழ தாயகத்தில் முகிழ்த்த தமிழ்த் தேசிய ஊடகங்களின் தாய் ஊடகமாகத் திகழ்ந்து, புலம்பெயர் தேசங்களுக்கு விருட்சம் விட்டுக் கிளைபரப்பிய ஈழமுரசு வரும் 20.05.2015 புதன்கிழமை முதல் மீண்டும் அதே மிடுக்குடன் ஊடக களத்தில் குதிக்கின்றது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ்த் தேசியப் பாதையில் வளைந்து கொடாது பயணிக்கும் பெருமை ஈழமுரசுக்கு உண்டு.
கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்ற ஒரே காரணத்திற்காக ஈழமுரசு எதிர்கொண்ட சோதனைகளும், சவால்களும், இழப்புக்களும் ஏராளம்.
ஆனாலும் எழுதுகோலை மட்டுமே ஏந்தியவாறு, துப்பாக்கிச் சன்னங்களையும், வெடிகுண்டுகளையும், ஏனைய இன்னோரன்ன ஆயுதங்களையும் எதிர்த்துத் தமிழ்த் தேசியப் பாதையில் உறுதியோடு ஈழமுரசு பயணிக்கின்றது.
அமைதி காப்பதாகக் கூறித் தமிழீழ மண்ணில் கால்பதித்த இந்தியப் படைகள், 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தொடங்கி யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஈழமுரசு பத்திரிகையின் பணிமனையை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த பொழுது முதலாவது பின்னடைவை ஈழமுரசு சந்தித்தது. ஆனாலும் அத்தோடு ஈழமுரசின் தமிழ்த் தேசியப் பயணம் முடிவுக்கு வரவில்லை.
மாவீரன் கப்டன் கஜன் அவர்களின் நெறிப்படுத்தலில் 1990களில் பிரான்ஸ் மண்ணில் கால்பதித்த ஈழமுரசு, கடுகதியில் ஐரோப்பா முழுவதும் கிளைபரப்பிப் பின்னர் கண்டம் கடந்து புலம்பெயர் தேசங்களில் விருட்சம் விட்டது. இதற்காகப் பல சவால்களை ஈழமுரசு சந்தித்தது. எழுத்தின் பெயரில் அரசியல் விபச்சாரத்தில் ஈடுபட்டோரின் வசைபாடல்களுக்கு ஆளாகியது. ஈழமுரசு எதிர்கொண்ட எல்லாச் சோதனைகளினதும் உச்சகட்டமாக 1996ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சிங்களக் கைக்கூலிகளால் பிரான்ஸ் மண்ணில் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அத்தோடு ஈழமுரசின் கதை முடிந்து விட்டது என்று எதிரியும், அரசியல் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டகர்களும் கனவுகாண, சவால்களுக்கு முகம்கொடுத்தவாறு தனது பயணத்தை உறுதியுடன் ஈழமுரசு தொடர்ந்தது.
2009ஆம் ஆண்டு மே 18உடன் தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்றுப் போக, புதிய தலைமை என்ற பெயரில் புலம்பெயர் தேசங்களில் களமிறங்கிய சிங்களக் கைக்கூலிகளிடமிருந்து மீண்டுமொரு சவாலை ஈழமுரசு எதிர்கொண்ட பொழுதும், அதனையும் முறியடித்து மீண்டும் 2009 புரட்டாதித் திங்களில் தனது பணியை ஈழமுரசு தொடர்ந்தது.
இவ்வாறு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டவாறு பயணித்த ஈழமுரசு, மீண்டும் கடந்த ஆண்டு புரட்டாதித் திங்களில் ஆயுதமுனையில் எதிரிகளின் மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்நோக்க நேர்ந்தது. ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் மீது பிரான்ஸ் மண்ணில் எதிரிகளால் படுகொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு தற்காலிகமாகத் தனது பதிப்புக்களை இடைநிறுத்த வேண்டிய நிலை ஈழமுரசுக்கு ஏற்பட்டது. நிலத்தை இழந்தாலும், பலத்தை தக்கவைத்து மீண்டும் களமிறங்கும் விடுதலைப் போராட்ட யுக்திக்கு இணங்க, இடைவிலகித் தன்னைப் பலப்படுத்திக் கொண்ட ஈழமுரசு, வரும் 20.05.2015 ஞாயிற்றுகிழமை முதல் மீண்டும் ஊடக களத்தில் குதிக்கின்றது.
எதிரி ஏற்படுத்திய தடைகளை அகற்றி எமது ஊடகப் பணிகளை நாம் மீண்டும் தொடர்வதற்கு வழிகோலிய பிரெஞ்சு காவல்துறையினருக்கு இத்தருணத்தில் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு, நாம் இடைவிலகிச் சென்ற பொழுதும் எம்மைவிட்டு விலகிச் செல்லாது, நாம் மீண்டும் களமிறங்கும் செய்தி அறிந்ததும் எவ்வித தயக்கமும் இன்றி எமக்குத் தோள்கொடுக்க முன்வந்த பிரான்ஸ் தேசத்தின் தமிழ் வணிகப் பெருந்தகைகளுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
நாம் இடைவிலகிச் சென்றோமே தவிர, ஓடி ஒளிந்துவிடவில்லை. காலமும், நேரமும் கூடிவரும் வரும் வரை காத்திருந்து மீண்டும் களமிறங்கியிருக்கின்றோம்.
எமது பாதை கரடுமுரடானது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனாலும் எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும், எத்தனை சோதனைகளுக்கு ஆளானாலும் எமது பயணத்தை நாம் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.
எமது பயணத்தில் இடையூறுகள் ஏற்படலாம். ஆனால் அதற்காக நாம் எமது பணிகளை நிறுத்தப் போவதில்லை. அதனால்தான் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு வடிவங்களில் சவால்கள் ஏற்பட்ட பொழுது எமது பணிகளை நாம் இடைநிறுத்திக் கொண்டாலும், எம்மைப் பலப்படுத்தித் தகுந்த தருணம் வந்த பொழுதெல்லாம் எமது பயணத்தை மீண்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றோம்.
நாம் பின்னடைவுகளுக்கு ஆளாகலாம்: ஆனால் எமது தமிழ்த் தேசியப் பாதையில் இருந்து ஒரு பொழுதும் பின்வாங்க மாட்டோம்.