பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான Sevigny le temple தமிழ்ச்சங்கத்தின் 20 ஆண்டு நிறைவுக்கொண்டாட்டமும், தமிழர் பண்டிகையாம் தைப் பொங்கல் விழாவும் கடந்த 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றிருந்தது. காலை 10.00 மணிக்கு சங்கத்தலைவர், மற்றும் உறுப்பினர்கள் மாணவர்கள் மக்களுடன் பொங்கல் பானை வைக்கப்பட்டது.
பொங்கல் அரிசியிட்டு பொங்கல் பொங்கி முடிந்ததுடன் அதற்கான வணக்கம் செய்யப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பொங்கல் பற்றிய விளக்கத்தை சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளங்கப்படுத்திக் கொண்டதைக் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. மதியம் 11.30 மணிக்கு மாணவர்களின் அணியிசை நடனத்துடன் விருந்தினர்கள், பொதுமக்கள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மங்கல விளங்கினை தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.கஜேந்திரகுமார், நிர்வாகி திருமதி.க. கிருஸ்ணகுமாரி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர். அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டது. சவினி லுத்தொம் தமிழ் பாடசாலைக்கான பாடலும் பாடப்பட்டது. வரவேற்புரையை ஆசிரியர் திருமதி சீ.கலாரஞ்சனி அவர்கள் வழங்க செல்வி நிவேதா அவர்களின் நெறியாள்கையில் வரவேற்பு நடனம் நடைபெற்றது. பொங்கல் நடனம், கலக்கல் நடனம், அபிநயப்பாடல் நடனம், குறத்தி நடனம், எழுச்சி பாடல் நடனம், பெற்றோர் நடனமும், கூத்து நாடகம், சமூகநாடகம் தமிழும் நாமும், தமிழ் வளர்த்த பெரியோர்கள் நாடகம் என்பன இடம்பெற்றன. தமிழ்ச்சோலையில் 12 ஆம் ஆண்டுவரை கற்று முடித்த மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களை சிறப்புவிருந்தினர்கள் சான்றிதழ்கள்; வழங்கி மதிப்பளிப்புச்செய்து வைத்ததுடன் அவர்கள் அனைவரிடமும் உங்கள் வாழ்விட நாட்டில் எவ்வாறான கல்வியை கற்கின்றீர்கள் அதன் உன்னதத்தை சபையோருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் தம்மையும் தமது கல்வியையும் கூறியிருந்தனர் மாணவர்கள் அத்தனைபேரும் சிறந்த தொழில்நுட்பவியலாளர்களாகவும், மருத்துவத்துறையோடும், கணிதவியலாளர்கள் போன்ற உன்னத கல்வியில் உயர் பல்கலைக்கழகக் கல்வியை கற்றுவருவதை அவர்கள் கூறுவதை பார்க்கவும் கேட்கவும் கூடியதாகவும் இருந்தது. மிகச்சிறந்த கல்வியைக் கற்றுவரும் இவர்கள் சாதாரணமாக அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தியதோடு அதற்கு மேல் தமது பெற்றோர்களுக்கும் தம்மை அக்கறையோடு தட்டிக்கொடுத்த தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொண்டனர். அத்தோடு தாம் தமிழ்ப்பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைவதாகவும் அதைவிடப்பெருமை உலகத்தின் மூத்தமொழி சாதித்த எங்கள் மொழி தமிழ்மொழியை பேசுவதையும் தொடர்ந்தும் படிப்பதையும் தாம் ஒரு தமிழன் என்று சொல்வதில் பெருமை என்றும் குறிப்பிட்டார்கள். மண்டபத்தில் அனைத்து மக்களும் எழுந்து நின்று இவர்களுக்கான கரகோசம் மூலம் தமது நன்றியைத் தெரிவித்தனர். புலத்தில் இவர்கள் போன்று பல ஆயிரம் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் உயர் படிப்பை முடித்து வெளியேறி வருவதையும் இவர்கள் எமது இனத்தின் சொத்துக்கள், எங்கள் முத்துக்கள் என்றும் எம்மண்ணின் விடுதலைக்காகவும், மொழியின் உயர்வுக்கும், தாய்மண்ணில் நாம் ஆயிரமாயிரம் உயிர்களை விலையாக விதைத்திருக்கின்றோம் அந்த நம்பிக்கையில் இந்த தலைமுறையினராலும் பயனை ஒருநாள் எமது தமிழினம் அடைந்தே தீரவேண்டும் என்றும் அதுவரை இவர்களையும், அடுத்து வளர்ந்து வரும் தலைமுறைக்கும் என்றும், உறுதுணையாக தமிழ்மக்களும், தமிழ் வளர்க்கும் சங்கங்களும், தமிழ்ச்சோலைகளும் உறுதுணையாக இருக்கும் என்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் இவர்களை வாழ்த்தியிருந்தார். புலம்பெயர் காத்தான் கூத்துநாடகம் நடைபெற்றது. சிறந்த முறையில் பக்கவாத்திய கலைஞர்களின் பாடல்களும் அரங்கம் கண்டிருந்தது. நவீன உலகத்தில் நீண்ட கால கலைவடிவம் கண்ட புராதன கலைவடிவம் எவ்வாறு இளைய தலைமுறையினரை பற்றிப்பிடித்திருக்கின்றது என்பதை அதனை நடித்த மாணவர்களிடம் காணக்கூடியதாக இருந்தது. இதனையொரு சாதனையாக சாதித்துக்காட்டியதோடு பாடல்களையும் பாடி பயிற்றுவித்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். 20 ஆவது ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரினை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் வெளியிட்டுவைக்க வர்த்தகர்கள் மற்றும் ஏனைய தமிழ்ச்சங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்களும் பெற்றுக்கொண்டனர். மாணவர்களுக்கான வெற்றிப்பதக்கங்கள், சான்றிதழ்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.மகேசு அவர்கள் வழங்கிவைத்தார். தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலினை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.அகிலன் அவர்கள் செய்துவைத்ததுடன் உரையும் ஆற்றியிருந்தார். தமிழ்ச்சோலை மாணவர்களின் வளர்ச்சி பரீட்சைப்பெறுபேறுகள் பற்றியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான உழைப்புப் பற்றியும் தமிழும் அதன் தொன்மை அதன் உயர்வு பற்றியும் கூறியிருந்தார். ஒவ்வொரு மொழிக்கும் வயதெல்லை குறிப்பிட முடியும் ஆனால் தமிழுக்கு மட்டும் வயதெல்லை இந்த நவீன தொழில்நுட்பத்தால்கூட கண்டுபிடித்து சரியாகக் கூறமுடியாத தொன்மையான இனம் என்றும் அதை அழியவிடாது தலைமுறை தலைமுறையாய் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பிரான்சில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் பற்றியும் அதில் செவினி மாநகரசபையில் போட்டியிடவுள்ள உதவிவேட்பாளரும் அவருடன் வலுச்சேர்க்க தேர்தலில் களம் இறங்கியுள்ள தமிழருமாகிய திரு.பிரியதர்சன் அவர்களும் உரையை ஆற்றித் தமக்கான ஆதரவை தரும்படி கேட்டிருந்தனர். சிறப்புரையாற்றிய பரப்புரைப் பொறுப்பாளர். நடைபெறப்போகும் உள்ளுராட்சித்தேர்தல் பற்றியும் அதன் முக்கியத்துவம் எம்மவர்களின் தேவைகள் இரண்டு வகையில் அவசியம் என்பதையும் ஒன்று தேர்தலில் வேட்பாளராக பங்கு பற்றுவதும், எமது மக்கள் தேர்தலில் சென்று வாக்களிப்பதும் மிகமிக முக்கிம் வாய்ந்ததாகவும் இவற்றில் பங்கெடுப்பதின் மூலமே எமது தேவைகளையும் நாம் இவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதையும், இதுவரை காலமும் செவனி லுதொம் முதல்வர் எமக்காகவும், எமது நியாயமான விடுதலைக்காகவும் எமது அனைத்து விதமான மொழி கலை கல்வி அரசியல் அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருந்து வருபவர் என்பதையும் அந்;த செயற்பாட்டிற்கான நன்றியை தமிழர்கள் தெரிவிக்கின்ற காலம் இது என்பதையும் தெரிவித்திருந்தார். செவினி லுத்தொம் சங்கமானது தாயகத்திலே விழுப்புண் அடைந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நாம் இருக்கின்றோம் கவலைப்படாதீர்கள் என்ற வகையில் ‘உதவும் கரங்கள்” மூலம் உதவியும் செய்தும் வருகின்றனர் என்பதும் இங்கு வாழும் மக்களின் மனிதநேயத்தை இது காட்டுகின்றது. வில்லுப்பாட்டினை வளர்தமிழ் 3 மாணவ மாணவியர் வழங்கினர். வில்லுப்பாட்டுக்குரிய வாத்தியக்கருவிகள் இல்லாதபோதும் நல்லதொரு மெட்டமைத்து மெட்டுக்கமைய வசனம் எழுதி மிகவும் வித்தியாசமான வில்லுப்பாட்டினை வழங்கியிருந்தனர். தமது தமிழ்ச்சோலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களை ஒவ்வொருவராக பெயரினையும் அவர்களின் திறன்களையும் எதுகை மோனைக்கமைய பாடி வாழ்த்தினார்கள். முடிவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் நினைவுப் பொருட்களைக் வழங்கினர். நடைபெற்ற கலை நிகழ்வுக்காக வாத்திய இசைகளையும், இசையின் ஊடான உதவிகளையும் செய்த தமிழர் கலைபண்பாட்டுக்கழக இளங்கலைஞர் சுரத்தட்டுக்கலைஞர் செல்வன் ஜெனார்த்தனன் அவர்கள் சங்க உறுப்பினர்களால் மதிப்பளிக்கப்பட்டார். மாணவர்களின் அற்புதமான நடிப்பில் வெளிநாட்டு மோகம் எவ்வாறான பொய்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தியது என்பதை உணர்த்திய நாடகமும், முள்ளிவாய்க்கால் என்னும் நாடகமும் மக்கள் மனங்களை தொட்டிருந்ததை அவர்களின் கரகோசங்கள் மூலம் காணக்கூடியதாக இருந்தது. பெற்றோர்கள் நடனமும் கோலாட்டமும் நடைபெற்றது. நடனமாடிய தாய்மாரை அவர்களின் குழந்தைகள் பாராட்டி கரகோசம் செய்தனர். நன்றியுரையுடன் 9.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது. அண்மையில் சிலகாலங்களாக நிகழ்வுகளில் ஒரு நாகரீகத்தை சகல நாடுகளிலும் எம்மவர்கள் செய்ய முனைவதை காணக்கூடியதாக இருக்கின்றது. நிகழ்வுகளில் மாணவர்கள் பங்குபற்றி அவர்களின் நிகழ்வுகள் முடிந்த கையோடு பிள்ளைகளும் பெற்றோர்களும் புறப்படுகின்ற இன்றைய காலத்தில் 20 ஆவது ஆண்டுவிழாவில் மாணவர்களுடன் பெற்றோர்களும் தமது சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் காலை 8.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை சலிக்காது 13 மணிநேரம் உற்சாகமாக நின்றமை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருந்தது.