முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் நான்கு இடங்களில் படை நிலைகளை அமைப்பதற்காக இராணுத்தினரால் நிலம் கோரப்பட்டுள்ளது. எனினும் நிலத்தை வழங்குவதற்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் படை முகாம்கள் அமைந்துள்ள 96 ஏக்கர் நிலத்தைப் படையினருக்கு வழங்க வேண்டும் என்று கடந்த அரசின் காலத்தில் கோரப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு நிலத்தை வழங்க அப்போது மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் நிலத்தை வழங்குமாறு மீண்டும் இராணுவத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது.
அந்த 96 ஏக்கரில் 10 பேருக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகளும் உள்ளன. அதனால் அந்த நிலத்தை இராணுவத்தினருக்கு வழங்க முடியாது என்று அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.