பிரான்சில் இடம்பெற்ற புளோமெனில் தமிழ்ச்சங்க 16 ஆவது ஆண்டு விழா!    

0
1057

பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான புளோமெனில் தமிழ்ச்சங்கத்தின் 16 ஆவது ஆண்டு சிறப்பாக Ecole jean jauré   மண்டபத்தில் கடந்த 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவீரர் குடும்பத்தின் சுடர் ஏற்றலுடன் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களுடன், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் சார்பாக திரு. ஈசன், தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. கணேசநாதன், நிர்வாகி திருமதி ஜெ. சாந்தி மற்றும் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஏற்றிவைத்து அகவணக்கம் செய்யப்பட்டு தமிழ்ச்சோலை கீதமும், பிரெஞ்சு கீதமும் இசைக்க விடப்பட்டது.

வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை செயலாளர் திரு.அமலதாசு அவர்களும், தலைமையுரையினை தலைவர் திரு. கணேசுநாதன் அவர்களும் ஆற்றியிருந்தார்கள். நிகழ்வுக்கு மாநகரமுதல் Thierry MEIGNEN அவர்களும், மற்றும் மாநகர மக்கள் குடியிருப்பின் ஆலோசகர் ஏனைய பிரமுகர்களும், மாநகர முதல்வரின் நண்பரும் தமிழ்ஆலோசகராக இருந்து வந்த செல்வி ஸ்தெபானி அவர்களின் தந்தையுமான திரு.சுரேந்திரன், திருமதி சுரேந்திரன் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு தமிழர் முறைப்படி வரவேற்புகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து மாணவர்களின் கலைவெளிப்பாடுகளாக மழலையர் நடனம், அபிநய நடனங்கள், பரதநாட்டியம், நாடகம், வீதி நாடகங்கள்; கிராமிய நடனம், வாய்ப்பாட்டு நற்கருத்துக்கள், கவியரங்கு, பட்டிமன்றம், எழுச்சிப் பாடல் நடனங்கள், போன்றன சிறப்பாக நடைபெற்றன. நாடகங்கள் யாவும் பல வாழ்வியல் கருத்துக்களை தருகின்றவையாக அமைந்திருந்தன. மாணவர்களும் சிறப்பாக நடித்தும் பலத்த பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்கள்.

மாநகர முதல்வர் உரையாற்றியிருந்தார். தனது மாநகரத்தில் வாழும் தமிழ்மக்களும் அவர்களோடு கொண்டுள்ள உறவு பற்றியும், அவர்கள் எவ்வாறு தனது மாநகரத்தில் தமது மொழியையும், கலைபண்பாடுகளையும் தமது தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றுதல் பற்றியும் தாம் நிறையவே அறிவதாகவும் அவர்களின் விருப்பத்திற்கமைய தான் அவர்கள் கேட்கின்ற உதவிகளை செய்து வருவேன் என்பதோடு அவர்களின் அடுத்த சந்ததியின் தாய்மொழிக்கல்விக்காக அவர்கள் எதிர்பார்க்கும் தமிழ்ச்சோலைக்கான தனிஇடத்தையும், அவர்கள் விரும்புகின்ற தொரு வணக்க நினைவுத்தூபியை நிறுவுவதற்கான இடத்தையும் தான் வழங்க உத்தேசித்துள்ளதாகவும். இதுவரை காலமும் தனது மாநகரத்திற்கு ஆலோசகராக தமிழினம் சார்பாக இருந்து வந்த செல்வி.ஸ்ரெபானி சுரேந்திரன் அவர்கள் உயர் பணிநிமித்தம் வேறுநாட்டிற்கு சென்றிருப்பதால் அந்த இடத்தையும் எதிர் வரும் மார்ச் மாத உள்ளூராட்சித் தேர்தலில் நிரப்புவதற்காக தன்னுடைய ஆலோசனையின் பிரகாரம் தமிழின உணர்வாளர், சங்க உறுப்பினரும், மக்கள் செயற்பாட்டாளருமாகிய திரு. கிங்ஸ்ரன் அவர்களை தான் நியமிப்பதாகவும் மக்களின் கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்திருந்தார். அவருக்கு தமிழ்மக்கள் தமது வாக்குகளை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளித்திருந்தார்.

நிகழ்வில் புளோமெனில் மாநகரத்தில் பல ஆண்டுகளாக சங்கத்திலும், தமிழ்ச்சோலையிலும் பணியாற்றி வந்த தலைவர் திரு.திருமதி கணேசநாதன் தம்பதிகளையும், திரு,திருமதி. சுரேந்திரன் தம்பதியினரையும் தமிழ்மக்கள் சார்பாக மதிப்பளித்து வைக்கப்பட்டனர்.

நிகழ்வில் சிறப்புரையை திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். 2020 ஆம் ஆண்டானது பல இரட்டிப்பான இரண்டும் கெட்டான் நிலையை ஏற்படுத்தியுள்ளதையும். சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஆபாயகரமான சூழ்நிலை தொடராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போக்குவரத்து பணிப்புறக்கணிப்புப் பற்றியும், தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை தமிழீழத்தில் கொழும்பையே உற்றுநோக்கி பார்க்க வைத்திருக்கும் எமது அடுத்த தலைமுறையின் கண்டுபிடிப்புகளும் உயர் தரப்பரீட்சைகளில் அவர்களின் திறன்களும் புலத்தில் வாழும் எம் பிள்ளைகளின் திறன்களும் ஒன்றாகி எம்தேசத்தின் விடுதலைக்கும் உயர்வுக்கும் பயன்படவேண்டும் என்றும், பிரான்சில் நடைபெறப்போகும் மாநகர உள்ளுராட்சித்தேர்தலில் ஒவ்வொரு மாநகரத்தில் எமது அடுத்த தலைமுறையினர் அரசியலில் ஈடுபடும் வகையிலும் தேர்தலில் பங்குகொள்வதும் அதனூடாக தமிழீழ மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்க்கு  பிரான்சு நாட்டின் பிரசாவுரிமை பெற்றுக்கொண்டவர்கள் எதிர் வரும் உள்ளுராட்சித்தேர்தலில் வாக்களிக்க அதற்கான பதிவுகளை மாநகரசபையில் சென்று தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டதுடன் எதிர்வரும் ஜெனீவா மனிதவுரிமைகள் 48 ஆவது கூட்டத்தொடரும் அதன் நீதிக்கான பேரணி அதில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கு ஈழத்தமிழர் வரலாறு என்ற நூலினை வழங்கி மதிப்பளிப்பும் செய்திருந்தார். இந்த ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் திருமதி சுபத்திரா மற்றும் ஏனைய சங்க உறுப்பினர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை மதிப்பளிப்பு செய்திருந்தனர். இவர்களுடன் மாணவர்களை ஆசிரியர்களும் மதிப்பளிப்பும் செய்து வைத்தனர்.

நன்றியுரையுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடனும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனும் தாரக மந்திரத்துடனும் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here