டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழில் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழிலுள்ள ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க இணைப்பாளர் தாக்கப்பட்டமை மற்றும் இந்த சம்பவத்தில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து, அவரை கைது செய்யவேண்டுமென்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட வேண்டும்’, ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்’, போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் நடைபெற்றபோது, அங்கு இரு வாகனங்களில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மேலும் போராட்டக்காரர்களின் கோஷங்கள் கேட்காமல் இருக்க கட்சி அலுவலகத்தின் வாயிலில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு சினிமாப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையில் இருந்த பதாதைகளை மர்ம நபர் ஒருவர் பிடித்து பறித்தமையினால் அங்கு சிறிது நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.