அனைத்து தமிழ்மக்களும் பலமாகுவோம். 2020இல் இன்னும் எம்மை வலுவாக்குவோம்!

0
401

  

ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எந்த வித காலவரம்பையும் நிர்ணயிக்க முடியாது. இறுதி இலட்சியத்தை அடையும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் – தமிழீழத் தேசியத் தலைவர் –

”அனைத்து தமிழ்மக்களும் பலமாகுவோம். 2020இல் இன்னும் எம்மை வலுவாக்குவோம்.’’

01.01.2020.

அன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் அனைத்து உப கட்டமைப்புகளும் புரட்சிகர வணக்கத்தை முதற் கண் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு ஒரு சிக்கலான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி நிலையான சமாதானமுமின்றி, இயல்பு நிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப்பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஓர் அரசியல் வெறுமைக்குள் திட்டமிட்டுத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த அரசியல் சூனியநிலை நீடித்தால் அது எமது இலட்சியப் போராட்டத்திற்கு பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம் என்பதை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 2008 மாவீரர்நாள் கொள்கைப் பிரகடன உரையில் குறிப்பிட்டிருந்தார். தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமான சிந்தனைக் கூற்றுக்கமைய, உன்னத உயிர்த்தியாகம் கொண்ட ஆயுதப்போராட்டம் 2009 அமைதியாக்கப்பட்டு ஒரு தசாப்தம் நிறைவுபெற்ற நிலையில், சிங்கள தேசத்தின் ஆட்சியாளர் தமிழ் மக்களினை புறந்தள்ளி பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படையாகவே முன்னிலைப்படுத்துகின்ற நிலையில் ஈழத்தமிழ் மக்களும், தமிழ்நாட்டு மக்களும், உலகத்தமிழ் மக்களும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய காலச்சூழமைவை உணர்த்தி நிற்கின்றது. பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியால் தமிழர்களின் அரசியல் இறையாண்மை பறிக்கப்பட்டது மட்டுமல்லாது, இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் இழப்புகள், மனிதப் பேரவலங்கள், தாயக நில வல்வளைப்புகள், புலம்பெயர்வுகள், சிங்களமயமாக்கம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை சர்வதேசம் நன்குணர்ந்துள்ளது. இதன் ஒரு வெளிப்பாடே பிரான்சு நாட்டின் அதிபர் டிசெம்பர் மாதம் 22 ஆம் நாள் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான “ஜவரிக்கோசு’’ நாட்டில் சர்வதேசத்திற்கு ஆற்றிய உரை. ‘காலனித்துவம் என்பது மிகப்பெரிய தவறு. காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள் இதுவரை என்ன அரசியல் வரலாற்று மாற்றத்தை கண்டு விட்டன? என்ற கேள்வியும். ‘காலனித்துவம் என்பது குடியரசு விழுமியங்களைக் கேள்விக்குறியாக்கும் ஆழமான பிழை’ என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இந்தக் கூற்றானது காலனித்துவ ஆட்சியால் நாடிழந்து போய் நிற்கின்ற தமிழீழ மக்களாகிய எமக்கும் நல்தோர் செய்தியாகவேயுள்ளது. பிரித்தானிய தேர்தல் வெற்றியில் தமிழ் மக்களுக்காக பிரதமர் கூறிய விடயங்கள், பிரெஞ்சு அதிபர் கூறியுள்ள வார்த்தைகள், ‘விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல தமது மக்களின் விடுதலைக்காக போரிட்ட அமைப்பே’ என்ற சுவிசு நாட்டின் உயர் நீதி மன்றத் தீர்ப்பு, ஏற்கனவே இதே போன்ற தீர்ப்பை வழங்கிய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலிய நாட்டின் தீர்ப்பு என அனைத்தும் தமிழ் மக்களாகிய எம்மை இன்னும் முனைப்புடனும் வீரியத்துடனும் 2020 இல் செயற்பட வைக்கும் என்பதில் ஐயமில்லை. அதன் ஒரு களமாக எதிர்வரும் 2020 மார்ச் 15 மற்றும் மார்ச் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள், பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. இதனை நாம் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்? 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்கின்ற தகுதியைப் பெற்றிருக்கின்ற நிலையில் இதனை எமது இனத்துக்கான வலுவான சக்தியாக நம்பிக்கையுடன் பயன்படுத்த முடியும். இத்தேர்தல்களில் ஈழத்தமிழ்மக்கள் சார்பில் எமது அடுத்த தலைமுறையினர் பங்கெடுக்கவேண்டியவர்களாகவுள்ளனர் என்பதனை நாம் மட்டும் சொல்லவில்லை. இதுவரை காலமும் கட்சி பாகுபாடின்றி எமக்காகக் குரல் கொடுத்தவர்களும், கொடுத்துக் கொண்டிருப்பவர்களுமாகிய பிரெஞ்சு அரசியல்வாதிகளின் நிலைப்பாடுமாகும். பாரிசின் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் எமது தமிழ் இளையவர்கள் தேர்தலில் பங்கெடுக்க தெரிவு செய்யப்பட்டும் உள்ளனர். இவர்கள் சிறுபராயம் முதல் உணர்வுள்ள தமிழ்ப் பெற்றோர்களாலும், தமிழ்வளர்க்கும் சங்கங்களினாலும், தமிழ்ச்சோலைகளாலும், உணர்வாளர்களாலும் தாய்மண் உணர்வுடனும் வாழ்விட மண்ணின், மக்களின், அரசியல், சமூக நலத்துடன் உருப்பெற்றவர்கள். இவர்கள் என்றும் பாதைமாறிப் பயணிக்கும், பணிந்து போகும் தன்மையைக் கடந்தவர்கள். எனவே இவர்களை தட்டிக்கொடுத்து அடுத்த அரசியல் தலைமுறையை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் தார்மீகக் கடமையாகும். இந்தச் சர்வதேச அரசியலின் செயற்பாடானது கனடா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, சுவிசு போன்ற நாடுகளில் உள்ளது போன்று பிரான்சிலும் அரசியல் ரீதியாக நாம் வலுப்பெற வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து வழிகளிலுமான எமக்கான தேவைகளை நிறைவேற்ற இது ஏதுவாக இருக்கும். எமது அரசியல் கட்டமைப்புகள் ஊடாகவும், சங்கங்கள் மூலமாகவும் இதர பொது அமைப்புகளூடாகவும் தமது அரசியற் பரப்புரைகளை விரைவாக முன்னெடுக்கவுள்ளோம். இதனைக் கவனத்திற் கொண்டு பிரான்சு வாழ் அனைத்து தமிழ்மக்களும் பலமாகுவோம். 2020ல் இன்னும் எம்மை வலுவாக்குவோம்.

‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ” நன்றி”அனைத்து தமிழ்மக்களும் பலமாகுவோம். 2020இல் இன்னும் எம்மை வலுவாக்குவோம்.’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here