ஈரானில் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெட்ரோல் மீதான வரியை அந்த நாட்டு அரசு கடந்த மாதம் உயர்த்தியது. இதனால் பெட்ரோலின் விலை 3 மடங்கு உயர்ந்தது. இது அங்கு பெரும் போராட்டத்துக்கு வித்திட்டது.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் அதிகமானோர் பலியானதாக ஆம்னெஸ்டி அமைப்பு கூறியது.
ஆனால் அந்தத் தகவலை ஈரான் மறுத்ததோடு, குறைவான எண்ணிக்கையிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், கலவரக்காரர்கள் மட்டுமே பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது.
இந்த நிலையில் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஈரானின் முக்கிய நகரங்களில் அரசுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
எனவே போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டின் முக்கிய நகரங்களில் இணைய சேவைகளை அந்த நாட்டு அரசு முடக்கி வைத்துள்ளது. இதனை அந்நாட்டின் இணைய கண்காணிப்பு சேவை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மாதமும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஈரான் முழுவதும் இணைய சேவைகள் முடக்கிவைக்கப்பட்டமை நினைவு கூரத்தக்கது.