விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளின் கல்விசார் நடவடிக்கைகளிலும் எழுத்துலக வளர்ச்சியிலும் பிரதான பங்காற்றியவர்களில் ஒருவரான பெண்ணியவாதியான யாழ்.பல்கலைக்கழக நூலகத்தின் பிரதான நூலகர் சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் இன்று மாரடைப்பால் சாவடைந்துள்ளார்.
இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறீகாந்தலட்சுமி பிரபல பத்தி எழுத்தாளராகவும் கவிதை எழுத்தாளராகவும் விளங்கியதுடன் சிறந்த விமர்சகராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
இணுவிலில் பிறந்த இவர் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பின்னர் பெங்களூரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டார்.
விடுதலைப்போராட்ட காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி வரையில் பயணித்த அவர் பெண் போராளிகளுக்கு ஆங்கிலம் உட்பட்ட பல்வேறு கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்.
அதேபோல கட்டுரைகள், கவிதைகள் என பெருமளவான படைப்புக்களை வெளியிட்டிருக்கின்றார்.
நிதர்சனம் பிரிவினரின் நிகழ்ச்சித் தயாரிப்புக்களில் பங்கெடுத்திருந்தார். அதேவேளை விடுதலைப்புலிகளின் வானதி வெளியீட்டகத்தினரின் பல நூல்களிலும் அவருடைய படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.
நூலகத்துறை சார்ந்து “நூலக அபிவிருத்தி ஒரு பயில் நோக்கி”, “சொற்பொருளாய்வுக் களஞ்சியம் நூலகத் தகவல் அறிவியல்”, “நூலக தகவல் அறிவியல் ஆய்வுக்கோவை” உட்பட்ட நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார்.
தமிழர்களின் பாரம்பரிய பாவனைப்பொருட்களை சேமித்து தன்னுடைய வீட்டில் சிறிய அளவிலான ஆவணக்காப்பகம் ஒன்றையும் பேணிவந்திருக்கின்றார்.
பாரம்பரிய ஆவணங்களை சிறார்களுக்கு கண்காட்சிகள் ஊடாக காட்சிப்படுத்துவதிலும் அக்கறைகாட்டிவந்திருக்கின்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் பிரதான நூலகராக விளங்கிய அவர் மாரடைப்பினால் இன்று காலமானதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.