பிரான்சு நொய்சி சாம் தமிழ்ச்சோலையின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா! பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான நொய்சி சாம் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடாத்தப்பட்டது. River மண்டபத்தில் வரவேற்பு குத்துவிளக்கு மற்றும் மங்கல விளக்கினை தமிழ்ச்சங்கத்தினர், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், பிரதம விருந்தினர் மாநகரமுதல்வர் M.B.Marsigny மற்றும் சிறப்பு விருந்தினர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா மற்றும் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளன செயற்பாட்டாளர் திரு.சுரேசு ஆகியோர் ஏற்றி வைத்தனர். சுடர் ஏற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்ச்சோலைக்கீதம் மாணவர்களால் பாடப்பட்டது. புஸ்பாஞ்சலி நடனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பாடலுக்கு நடனம் இடம்பெற்றது. வரவேற்புரையை பள்ளி நிர்வாகி ரஜனி செல்வரோதயம் அவர்கள் வழங்கினார். தலைமையுரையினை சங்கத் தலைவர் திரு. ம.ஜெகநாதன் அவர்கள் வழங்கினார். சிறுவர்களின் அபிநய நடனமும் கோலாட்டமும் இடம்பெற்றது. சிறுமி சிறீதரன் அக்சயா ‘தேசக்காற்றே தேசக்காற்றே” பாடலினை வழங்கினார். மயில் நடனம், தமிழே தமிழே நடனம் இடம் பெற்றன. மாநகர முதல்வர் M.B.Marsigny அவர்கள் உரையாற்றினார். தாம் நீண்ட காலமாக தமிழ்மக்களோடும் உறவைப்பேணுவதாகவும் பல்வேறு சமூகம் இந்த பிரதேசத்தில் வாழ்வதையும் தமிழ்மக்கள் ஒரு தனித்துவம்மிக்கவர்கள் என்பதையும் அவர்கள் ஒரு நல்ல சமூகமாக இருப்பதோடு, அடுத்த தலைமுறையை சிறப்பாக வளர்த்து வருவதும் அதில் கல்வி, கலை சிறந்த இடத்தை வகிக்கின்றது என்பதையும் கூறியிருந்தார். தொடர்ந்து கவிதை ,சமூகநாடகம், வாள் நடனம், திருக்குறள், வாய்ப்பாட்டு, பேச்சு என்பன இடம்பெற்றன. ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. தலைவர் வெளியிட்டு வைக்க நொய்சி சாம் மாநகரசபையின் கலாசாரப் பொறுப்பாளர் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் பெற்றுக் கொண்டார். சிறப்புரையையும் ஆற்றியிருந்தார். வாழ்வில் நாம் எதனை இழந்தாலும் கற்றகல்வியை மட்டும் இழக்க மாட்டோம் என்பதையும் கல்வி என்பது ஒருவனுடைய வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதையும் நொய்சி சாம் பள்ளி எவ்வளவு தூரம் சமகால தேசிய நீரோட்டத்தில் பயணிக்கின்றது என்பதையும் இன்னும் உயர்வான நிலைக்கு வரவேண்டும் என்றும் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், சங்கத்தினரையும் வாழ்த்தியதோடு, தாயகத்தில் இயற்கையின் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். மாநகர சபையின் நொய்சி சாம் பகுதிப்பொறுப்பாளர் மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர் திருமதி ந.பூபதி ஆகியோர் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர். 10, 11 வகுப்பு மாணவர்களால் வரலாறு என்ற நாடகமும் இடம்பெற்றது. தொடர்ந்து ஆசிரியர்கள் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக முக்கிய செயற்பாட்டாளர் திரு.அகிலன் அவர்களால் மதிப்பளிப்பு செய்து வைக்கப்பட்டனர். தொடர்ந்து பட்டிமன்றம், சமூகநாடகம், சிலம்பு, வில்லுப்பாட்டு, பண்டாரவன்னியன் நாடகம், மாணவர்களுக்கான மதிப்பளிப்பு போன்றவை இடம்பெற்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கலைத்திறன்களை ஆவலுடன் பார்த்து மகிழ்ந்தனர். மண்டபம் நிறைந்த மக்களுடன் நிகழ்வுகள் நடைபெற்றன. சிற்றுண்டிச்சாலையில் வரும் ஒரு பகுதியை தாயகத்தில் வெள்ளநிவாரணமாக வழங்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.