சுவிஸ் நாட்டின் ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல் ஈழத்து தமிழ் பெண்ணாக தாமரைச்செல்வன் கீர்த்தனா நியமனம் பெற்றுள்ளார். உள்நாட்டு யுத்தத்தால் புலம்பெயர்ந்து வந்த பெற்றோர்களுக்கு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் கராத்தே தற்காப்பு கலையை 6 வயதில் இருந்தே பயின்று வந்த இவர், தனது 18ஆவது வயதில் கறுப்பு பட்டியை பெற்றுக்கொண்டுள்ளார். இதே சந்தர்ப்பத்தில் சுவிஸ் பிரெஞ்சு பேசும் மாநிலங்களுக்கிடையில் நடந்த கராத்தே சுற்றுப்போட்டியில் 2008, 2011ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் கராத்தே ஆசிரியராக இருந்து வருவதுடன், தனது கல்வியிலும் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார். உயர் தேசிய வர்த்தக டிப்ளோமா, இளநிலை முகாமைத்துவ கணக்கியல்மானி என்ற பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். அத்துடன் தனது திறமையால் உயர் அதிகாரியாக இன்று வலம் வருகின்ற நிலையில் இவரை உலகத் தமிழ் மக்கள் வாழ்த்துகின்றனர். அத்துடன் தங்களது அரசியல் பிரச்சினைகளை சுவிஸ் அரசுகளோடு பேசுவார் என சுவிஸ் வாழ் தமிழ் மக்கள், தாமரைச்செல்வன் கீர்த்தனா மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.