பிரான்சில் தேசத்தின்குரல் மற்றும் தமிழ்ச்செல்வன் உட்பட்ட நினைவேந்தலும் கேணல் பரிதி அவர்களின் மதிப்பளிப்பும்!

0
982

பிரான்சில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆம் ஆண்டு மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் பருதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு சுமந்து, புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்து பட்டம்பெற்ற மாணவ மாணவியர் மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பொண்டிப் பகுதியில் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனை, பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பு மற்றும் பொண்டித் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைக்க, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திரு உருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை 1999 ஆம் ஆண்டு கொக்குவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் மற்றும் 6 மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படம் மற்றும் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 1989 ஆம் ஆண்டு மல்லாகத்தில் இந்திய இராணுவத்தினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை ஜோண்சன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். 02.04.2000 அன்று பளை இத்தாவில் பகுதியில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். காண்டீபன் அவர்களின் சகோதரி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொண்டி தமிழ்ச்சோலை, லுபுளோமெனில் தமிழ்ச்சோலை, செவ்ரோன் தமிழ்ச்சோலை, நியூலி சு மார்ன் தமிழ்ச்சோலை ஆகியவற்றின் மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனங்கள், பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த திருமதி ஜனனி அவர்களின் பரிதி அண்ணா நினைவுசுமந்த கவிதை, பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கலைஞர்களின் மாவீரர் நினைவு சுமந்த எழுச்சி கானங்கள் என்பன சிறப்பாக அமைந்திருந்தன. இந்நிகழ்வுகளைச் சிறப்பிக்க பொண்டி நகரபிதா Sylvine Thomassiமற்றும் துணை நகர பிதாவும் பொண்டி மாநகர விளையாட்டுத்துறைப் பொறுப்பாளருமான Charlie Nabal ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்ததுடன், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திரு உருவச்சிலையினை பொண்டிப் பகுதியில் விரைவில் நிறுவுவதற்கான வேலைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்திருந்தனர். உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரான்சு மண்ணில் உயர்கல்வியை முடித்து பல்வேறு துறைகளிலும் பட்டம்பெற்ற 08 தமிழ் மாணவ மாணவியர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை கேணல் பருதி அவர்களின் தாயார் வழங்கியிருந்தார். மோகானந்தன் கோபினா, அரியரட்ணம் பிரணவன், முருகானந்தராஜா கீர்த்தனா, பேரின்பமூர்த்தி அஜந்தன், மரியநாயகம் மேலானி, நித்தியானந்தன் உமையவள், முத்தத்தம்பி அஜிந்தனா, தங்கத்துரை தாட்சாயனி ஆகிய மாணவ மாணவிகள் சான்றிதழ், நினைவுப்பதக்கம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here