யாழ். மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் செய்துவிட்டு செல்லும் வழியில் பொலிஸாரைக் கண்டவுடன் உந்துருளிகளை போட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது..
சுதுமலை வடக்கு மானிப்பாயிலுள்ள வீடொன்றுக்கு இலககத் தகடுகள் மறைக்கப்பட்ட இரண்டு உந்துருளிகளில் வாள்களுடன் ஆறுபேர் சென்றுள்ளனர். முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல் குறித்த வீட்டு இளைஞரை வீட்டிற்குள் தேடியுள்ளனர்.
ஆனால் அவர் வேலைக்கு சென்றதால் அந்தச் சமயம் வீட்டில் இருக்கவில்லை. இதனையடுத்து வீட்டின் கண்ணாடிகள் கதவுகளையும் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளனர்..
அத்தோடு குறித்த வீட்டிலிருந்தவர்களையும் வாள்கள் கொண்டு அச்சுறுத்தியுள்ளனர். இவ்வாறு வீட்டில் வன்முறைக் கும்பலொன்று மேற்கொண்ட அட்டகாசத்தையடுத்து வீட்டிருந்தவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர். பின்னர் ஆறுபேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் செல்லும் வழியில் மானிப்பாய் பொலிஸார் வந்திருந்தனர். இவ்வாறு பொலிஸார் வந்ததையடுத்து தமது இரண்டு உந்துருளிகளையும் வீதியில் போட்டுவிட்டு வன்முறையில் ஈடுபட்ட ஆறுபேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் இரண்டு உந்துருளிகளையும் அவர்கள் பயன்படுத்திய வாள்களையும் மீட்டுள்ள மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.