மண்கும்பானில் மணல் கடத்தும் உழவு இயந்திரம் தீக்கிரை!

0
298

-மண்கும்பானில் மணல் கடத்தல்-
மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதற்கு
பொலிஸாரும் அதிகாரிகளும் காரணமா?

மண் மற்றும் மணல் தொடர்பாக அரசாங்கத்தின் அறிவிப்பும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் அசிரத்தையும் மக்களை மோதவைத்து அவர்களின் சொத்துக்களை அழிக்கும் நிலைக்கு சென்றிருக்கின்றது.

மணல் கொண்டுசெல்வதற்கு இதுவரை இருந்துவந்த அனுமதி பெற்றுக்கொள்ளும் நடைமுறை கடந்த 5 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இது ஒரு வார காலத்திற்கான பரீட்சார்த்த நடவடிக்கை எனவும் இது குறித்து ஒரு வாரத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்திருந்தார்.

எனினும், மணல் மற்றும் மண் என்பவற்றை அகழ்வதற்கான இடங்கள் தொடர்பாக இதுவரை இருந்துவந்த நடைமுறைகளில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் அரச அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திருட்டுத்தனமாக மணல் மற்றும் மண் விற்பனை செய்பவர்களும் அவற்றை ஏற்றிச்செல்பவர்களும் இந்தச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். தீவகத்தில் ஏற்கனவே மண் கடத்தலில் ஈடுபடுபவர்களும் இதில் அடக்கம்.

தீவகம் – மண்கும்பானில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மணல் ஏற்றியவர்கள், இதில் காயமடைந்தவர்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

‘அரசாங்கம் ஒரு கிழமைக்கு மண் ஏற்றிச் செல்ல முடியும் என அறிவித்திருக்கின்றது. நாம் மண்கும்பானில் மண் விற்பனை செய்யும் ஒருவரிடம் ஒரு உழவியந்திரச் சுமைக்கு 2000 ரூபா வீதம் செலுத்தி மணல் வாங்கினோம். அவற்றை ஏற்றச் சென்றபோதே வீதியில் மறைந்திருந்தவர்கள் எங்களைத் தாக்கிக் காயப்படுத்தி எமது உழவியந்திரங்களுக்கும் தீவைத்தனர்’ எனக் கூறினர்.

தீவகம் சாட்டி மற்றும் மண்கும்பான் ஆகிய பிரதேசங்களில் கடந்த ஒரு வாரமாக தப்பாட்டி, நாரந்தனை, ஊர்காவற்றுறை, சுருவில், சரவணை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் டிப்பர் மற்றும் உழவியந்திரங்களில் மணல் ஏற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அரசு அறிவித்த ஒரு வார காலத்தில் மணலை எவ்வவு ஏற்றமுடியுமோ அவ்வளவு ஏற்றிவிட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

ஆக, பெருந்தெரு ஒன்றின் ஊடாக, ஒரு வாரமாக டிப்பர் மற்றும் உழவியந்திரங்களில் அதிக தடவைகள் மணல் ஏற்றிச்செல்லப்படும் சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகளோ காவல்துறையினரோ ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தனர்?

குறித்த பிரதேசம் வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கும் உட்பட்டது.

தமது பிரதேச மண்வளம் தொடர்பாக மக்கள் அக்கறை எடுக்கும் அளவிற்கு இந்த விடயத்தில் பொறுப்புடைய அதிகாரிகளும் காவல்துறையும் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்துள்ளமை தெளிவு.

இதனாலேயே பிரதேச மக்கள் சட்டத்தை தமது கையில் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பெருந்தொகையில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டதை காவல்துறையோ பிரதேச செயலகமோ அவதானிக்கவில்லை எனில் தமது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அவர்கள் எத்தகைய அக்கறையுடன் செயற்படுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

மேலும் காவல்துறையின் கண்காணிப்பில் பலவீனம் ஏற்பட்டுள்ளமை உணரப்படுகின்றது. அல்லது, இச்செயற்பாட்டுக்கு காவல்துறையும் உடந்தையா? என்ற கேள்வி எழுகின்றது.

சட்டம், ஒழுங்கு போன்றவற்றை நடைமுறைப்படுத்துபவர்கள் தூங்கினார்கள், அதனாலேயே மண் விற்பனை செய்தவர்களும் ஏற்றியவர்களும் சட்டத்தைக் கையில் எடுத்து சட்டவிரோமாக செயற்பட்டனர்.

அவற்றைத் தடுக்க முற்பட்ட பிரதேச மக்களும் சட்டத்தைக் கையில் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக திறந்த விசாரணை நடத்தப்படவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here