பிரான்சில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு திங்கட்கிழமை வரை தொடரவுள்ளது. நேற்றையதினம் தானியங்கி நிலக்கீழ் தொடருந்துகளான 1 மற்றும் 14 ஆகிய இரண்டும் நள்ளிரவு வரை தமது சேவைகளை வழங்கியிருந்ததுடன், குறிப்பிட்ட சில பேருந்துகளும் தமது சேவைகளை வழங்கியிருந்தன. இதில் 114 ஆம் இலக்க பேருந்தின் பணி குறிப்பிடத்தக்கது. ஆனால் இரவு 11 மணிக்குப் பின்னர் குறித்த 114 ஆம் இலக்க பேருந்து முன் அறிவித்தல் ஏதுமின்றி மக்களை நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கியது. அதாவது சேவை நிறுத்தப்பட்டது. குறித்த பேருந்தை நம்பி 1 ஆம் இலக்க நிலக்கீழ் தொடருந்தில் சத்தோ து வன்சன் சென்ற மக்கள் அங்கு இரண்டு மணி நேரம் கடும் குளிருக்கு மத்தியில் காத்திருந்து ஏமாற்றமடைந்து பின்னர் இரவுநேர பேருந்துகளில் எங்கே செல்வது எனத் தெரியாமல் சென்றதையும் காணமுடிந்தது.
இவ்வாறு பல இடங்களில் மக்கள் அலைந்து திரிந்ததைக் காணமுடிந்தது.
பரிசில் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.அரசாங்கத்தினை தட்டிக்கேட்க நடாத்தும் இவ்வாறான போராட்டங்களில் அப்பாவிப் பொதுமக்களே பலிக்கடாவாக்கப் படுகின்றார்கள். இவ்வாறு மக்கள் படும் துன்பங்களை எந்த ஓர் தொண்டு அமைப்புக்களும் கண்டுகொள்வதில்லை. இதனை உரிய தரப்பினர் கவனத்தில் எடுக்க வேண்டும்.
குறித்த பணிப்புறக்கணிப்பு இன்று மேலும் மோசமடையும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.