தமிழர் தாயகப் பகுதி எங்கும் கனமழை:மக்கள் நிர்க்கதி!

0
339

வடக்கு – கிழக்கில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் பல பகுதிகளில் வெள்ளம் காரணமாக மக்கள் அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர். பல வீதிகளும் தடைப்பட்டு ள்ளன. மக்கள் டெங்கு உள்ளிட்ட பல நோய்த்தொற்றிற்கும் உள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 26.8 அடியாக உயர்வடைந்துள்ளது.

இக்குளத்துக்கான நீர்வரத்து தொடர்ச்சியாக வருவதனால் குளத்தின் நீர்மட்டம் அதி கரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான அவசர கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

“10 பிரதேச பிரிவுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய மழைவீழ்ச்சி 1650.9 mm. மழைவீழ்ச்சி 1789.2 mm ஆக இதுவரை பதிவாகியுள்ளது.”எனவும்

“இதனால் வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொது இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.அவர்களிற்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.தேவையான உதவிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் ஊடக வழங்கப்பட்டு வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலையிலும் மழையினால் மக்கள் பெரும் அவலங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 180 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

அந்தவகையில், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நேரியகுளம் பகுதியில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45 வீடுகளும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது. வவுனியா வடக்கில் மருதோடை கிராம அலுவலர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும், போகஸ்வேவ பகுதியில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும், கெம்பலிவேவ பகுதியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேரும், ஊஞ்சல் கட்டியில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேரும், புளியங்குளம் தெற்கில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் ஆக 180 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

புளியங்குளம் தெற்கு, மருதோடை, செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயம் என்பவற்றில் பாதிக்கபடபட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 76 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக சமைத்த உணவை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் வட்டுக்கோட்டை அராலிப் பகுதியில் வீடுகளிற்குள் வெள்ளம் சென்று மக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றார்கள்.

வீட்டுத் திட்டம் கிடைக்கப்பெற்ற நிலையில் தாங்கள் வசித்து வந்த வீட்டினை அகற்றிவிட்டு சிறு குடிசை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டுத் திட்ட வீடு முழுமை பெறாமல் சிறு குடிசைகளில் வாழ்ந்து வந்த மக்களின் வீடுகளிற்குள் மழை நீர் சென்றதால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சிறுவர்களும் .முதியவர்களும் நோய்த் தாக்கங்களிற்கு உள்ளாகி வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெய்துவரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இதுவரை பாரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்படவில்லை எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here