தமிழீழவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது. புலிகள் அமைப்பு குற்றத்திற்குரிய அமைப்பு அல்ல என நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் புலிகளுக்கு நிதி சேகரித்தமை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்ட 12 பேர் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
1999ம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுவிஸ்லாந்து குற்றவியல் தண்டனை சட்டத்தின் 260 வது சரத்தை மீறி, புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேரில் 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது குற்ற அமைப்பு ஒன்றுக்கு உதவும் நடவடிக்கை என கூறப்பட்டிருந்தது.
பெடரல் குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு இதன் சந்தேக நபர்களை விடுதலை செய்ததுடன் இன்று வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் அல்-கைதா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் கையாளப்பட்டது.
ஆனால் குறித்த குற்றம் நிகழ்ந்த போது புலிகள் அமைப்பு குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பாக கருதப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த அமைப்பு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருந்தாலும் தனியான ஆட்சி அதிகாரத்தை பெறுவது, தமது சமூகத்தை சுயாதீனமான சமூகமாக அங்கீகரிக்க கோரியே ஆயுதப் போராட்டத்தை நடத்தியது என நீதிமன்றம் கருதியுள்ளது.