எம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் துறோவா வில் வாழும் தமிழீழ மக்களும், அயல் நகரமான சொன்ஸ் வாழ் தமிழீழ மக்களும் நேற்று (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 3.30 மணிக்கு மாவீரர் பெற்றோர், சகோதரர்கள் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வுகள் நடாத்தியிருந்தனர்.
கல்லறைகள் விடைதிறக்கும், கல்லறை மலரே, கடலே கடலே, தலைமறைவுப்போராளி பாடல்களுக்கான மாவீரர், எழுச்சி நடனங்களை செல்விகள். மெலிதா செல்வரதன், ஜெனுசா செல்வரதன்,சைந்தவி சிறிதரன் வழங்கியிருந்தனர். செல்வி ஹரிணி அவர்கள் மாவீரர் நினைவு சுமந்த பாடல்களை வழங்கியிருந்தார். சைந்தவியின் தனிநடிப்பில் இளையோருக்கான விழிப்புணர்வு நடிப்பு அனைவரின் பலத்த பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. சென்ஸ் நகரத்திலிருந்து வந்த இளையவர் நிரூபன் மாவீரர் கவிதையை வழங்கியிருந்தார்.
மாவீரர் உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்ரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா ஆற்றியிருந்தார். கடந்த செப்ரெம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் பற்றியும், அதில் சொன்ஸ் பகுதிவாழ் மக்கள் , துறொவா வாழ் மக்கள் பங்கு பற்றியும், வழிஎங்கும் கண்ட பிரான்சு நாட்டின் விடுதலைக்காக உயிர் ஈந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதைகளும் நினைவுச்சின்னங்கள் பற்றியும் தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் துறொவா முதல்வர் சனாதிபதித் தேர்தலில் நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரெஞ்சு அரசியலில் இருப்பதையும் அவர்களுடன் நல்லுறவுகளை இங்குள்ள மக்கள், இளையவர்கள் பேண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிறப்புரையை இளையோர் அமைப்பையும் தாயகச்செயற்பாட்டையும் முன்னெடுத்து வரும் செல்வன் திவாகர் அவர்கள் ஆற்றியிருந்தார். எமது போராட்டப் பாதையில் உயிர் ஈகம்செய்த மாவீரர்களின் தியாகமும் இனி வரும் காலங்களில் சனநாயக ரீதியில் அரசியல் பாதையில் இளையோர் எந்தெந்த வழிகளில் பயணிக்க வேண்டும் என்றும் தாயகத்தின் அரசியல் சூழ்நிலை பற்றியும், அவர்கள் புலத்தில் ஐ. நா மனிவுரிமைகள் மையத்தில் தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை தான் நேரில் கண்டிருப்பதாகவும், ஒவ்வொரு துறையிலும் கல்வி கற்கும் மாணவர்கள் தமது மண்ணுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்று அதற்கு பெற்றவர்கள் தான் பெரும் பலமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நடைபயணத்தின் போது துறோவா பகுதியிலிருந்தும், சொன்ஸ் பகுதியிலிருந்தும் வந்து இணைந்து கலந்து கொண்ட இளையவர்களும் அவர்களையும், மற்றவர்களையும் ஊக்கம் கொடுத்து தேசியத்தலைவரின் நிழற்படம் பொறித்த சட்டமும் மற்றும் பேராசிரியர் மு. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய இலங்கை அரசியல் யாப்பு ( லாக்குர்நோவ் தமிழ்ச்சங்கத்தினால் பிரெஞ்சுமொழியில் வெளியிடப்பட்ட) புத்தகமும் அவர்களுக்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
இவர்களோடு நடைபயணத்தின் போது அப்பகுதிகளில் எமக்கு பல வழிகளில் உதவிய திரு. யோகேசுவரன் அவர்கள் துறோவா மக்கள் சார்பாக மதிப்பளிக்கப்பட்டார். துறோவா மக்கள் சார்பாக இந்நிகழ்வுகளுக்கு பாரிசிலிருந்து வந்தவர்களுக்கும், சொன்ஸ் மற்றும் ஏனைய மாநிலங்களிலுமிருந்து வந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தனர். 7.30 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிறைவுபெற்றது. மழைக்கு மத்தியிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டு தம்மை உலகில் தலைநிமிரச் செய்த மாவீரர்களுக்கு தமது கடமையைச் செய்த உணர்வுகளுடன் நின்றிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு )