வெளிநாட்டு வாழ்க்கையை தேடி வந்து பிரித்தானியாவில் மாண்ட வியட்நாமியர்கள் அனைவரின் சடலங்களும்,அஸ்தியும் சொந்த மண்ணுக்குச் சென்று சேர்ந்தன.கொள்கலன் லாரி ஒன்றில் மாண்டுகிடக்கக் காணப்பட்ட வியட்நாமியர்கள் 16 பேரின் சடலங்களும் 7 பேரின் அஸ்தியும் சொந்த மண்ணைச் சென்றடைந்துள்ளன.மொத்தம் 39 பேர் சென்ற மாதம் லாரியில் மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.முன்னதாக கடந்த புதன்கிழமை 16 பேரின் உடல்கள் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.எஞ்சிய 23 பேரின் சடலங்களும், அஸ்தியும் நேற்றுக் காலை ஹனோய் விமான நிலையம் சென்றடைந்ததாய் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்களில் 7 பேரின் உடல்கள் பிரிட்டனிலேயே எரிக்கப்பட்டதாய் வியட்நாமிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஆள்கடத்தல் முகவர்கள் மூலம் பிரிட்டன் செல்ல முயன்ற அந்த 39 பேரும் குளிரூட்டப்பட்ட கொள்கலனில் மாண்டுகிடந்தனர்.அதன் தொடர்பில் வியட்நாமியக் காவல்துறை 10 பேரைக் கைது செய்துள்ளது.கடந்த திங்கட்கிழமை அந்த லாரியை ஓட்டிச் சென்ற ஆடவர் சட்டவிரோதக் குடியேற்றத்துக்குத் துணைபோன குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மாண்ட வியட்நாமியர்கள் எதிர்காலத்தில் மேம்பட்ட வாழ்க்கை கிட்டும் என்ற நம்பிக்கையில் சென்றதாகவும்,அவர்களது மறைவு குடும்பங்களுக்குப் பேரிழப்பு என்றும் குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.