பிரான்சு ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வும் பெற்றோர் மதிப்பளிப்பும்!

0
397

கடந்த 27.11.2019 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள்.

மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய, அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சுடரினை வீரவேங்கை மயிலினி அவர்களின் சகோதரன் திரு. முகுந்தன் சின்னத்தம்பி அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் விளக்குகளை ஏற்றினர்.  அதேநேரம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாவீரர் திரு உருவப்படக் குடிலுக்கு பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜெனனி ஜெயதாசன் அவர்கள் விளக்குகளை ஏற்றினார். துயிலுமில்லப் பாடலைத் தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டதுடன் மலர்வணக்கமும் இடம்பெற்றது.

மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரமறவர்களின் நடுகற்கள் நாட்டப்பட்டு பல வண்ண மலர்களால் சூடப்பட்டிருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மிகவும் உணர்வுடன் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்பு நிகழ்வை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் திரு. ந.கிருபானந்தன் அவர்கள் முன்னின்று நடாத்தி வைத்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், எழுச்சி நடனங்கள், கவிதைஅரங்கம்; பேச்சுகள் இடம் பெற்றன.

மாவீரர் நினைவாக நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் தேசிய மட்டத்தில் 2 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். (ஓவியப்போட்டி,  கட்டுரைப்போட்டி) போட்டிகளில் பங்குகொண்ட தமிழ்ச் சோலை மாணவர்களுக்கு மாவீரர்நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இறுதியில் நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” தாரக மந்திரத்துடன் மாவீரர்நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here