பிரான்சில் கொட்டும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2019 நினைவேந்தல் நிகழ்வு!

0
1753

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019  பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2019 புதன்கிழமை பாரிசின் Porte de la villette பகுதியில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவரின் கடந்தகால மாவீரர்நாள் உரைகளின் முக்கியதொகுப்புக் காணொளி திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினரின் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. 13.35 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது.

துயிலும் இல்ல மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.  ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார். லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை 05.11.1999 அன்று ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அருளன் அவர்களின் தாயார் அணிவித்தார். சமநேரத்தில் பாரிசு துயிலும் இல்லத்தில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சார்சல் பகுதியில் அமைந்துள்ள லெப்.சங்கர் அவர்களின் நினைவுத்தூபியின் அருகில் மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், கண்ணீர் காணிக்கையோடு மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து இரவு வரை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் தமது மலர்வணக்கத்தை மேற்கொண்டவண்ணமிருந்தனர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன. தமிழர் கலைபண்பாட்டுக் கழக கலைஞர்களின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும், தமிழ்ச்சோலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும், மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப் போட்டியில் முதல் இடங்களைப் பெற்றவர்களின் பேச்சுக்களும், தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்களின் சிறப்புரை, தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களின் உரை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களின் அறிக்கை, மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கிருபாகரன் அவர்களின் உரைபிரான்சு, தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர் நிந்துலன் அவர்களின் உரை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த வெளிநாட்டவர்களின் பிரெஞ்சுமொழி உரை என்பனவும் இடம்பெற்றிருந்தன. வெளிநாட்டவர்களாக Mme Marie-George Buffet (Député -Seine-Saint-Denis – Président du Group d’étude sur le peuple tamoule), Mme Clémentine Autain – (Député – Seine-Saint-Denis), M.Didier Mignot (Conseiller régional – Seine-Saint-Denis – Ile de France), M.David FABRE (Savigny sor Bois), Dr.HERVÉ HUBERT (PSYCHIATRE)  ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சின் ஏனைய பகுதிகளில், தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்களும் திரையில் காண்பிக்கப்பட்டிருந்தன. அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிடப்பெற்ற மாவீரர் பெட்டகம் மேடையில் வெளியிட்டுவைக்கப்பட்டது. அத்தோடு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நாம் சஞ்சிகையும் சிறப்புவெளியீடாக மண்டபத்தில் வழங்கப்பட்டது.

பிரான்சு  தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் வழங்கிய ‘சினங்கொள் உரங்கொள்” என்ற சிறப்பு நாடகம் இடம்பெற்றது. குறித்த நாடகத்தில் தமிழ் மக்களின் நீண்டுசெல்லும் போராட்டம். நாம் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி கொண்டுசெல்லவேண்டிய எமது போராட்டத்தின் தேவைகள் குறித்தும். நாம் சினங்கொண்டு உரத்தோடு தொடர்ச்சியாகப்கவிதை கட்டுரை எமது விடுதலைக்கெனப் போராடவேண்டும் என்பதை குறித்த நாடகத்தில் மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தனர். நாடகத்தில் பங்குபற்றிய கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையாக தமது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (கவிதை கட்டுரை, பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. பரிசில்களை மாவீரர் பெற்றோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர். வழமைபோன்று வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீடுகளை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கியதையும் காணமுடிந்தது. தமிழீழ உணவகத்தினரும் பொதுமக்களுக்குத் தேவையான உணவை வழங்கியிருந்தனர். ஊடகங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் முனைப்புக்காட்டியிருந்தன. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பினர், தாயக மக்களுக்கு உதவும் அமைப்பினர், ஊடகமையம் போன்ற அமைப்புக்கள் தமது காட்சிப்படுத்தலை மேற்கொண்டிருந்தனர். 21.00 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன. கடும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுவந்து மாவீரர்களை நினைவேந்திச் சென்றனர். (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here