வதந்திகளை நம்பாதீர்கள்!
மாவீரர் தினம் அனுஸ்டிக்க ஏற்பாடு செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது !
கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்ல மாவீரர் நாள் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்ட 15 பேரை காணவில்லை!
பொலிஸார் வீதித்தடைபோட்டு சோதனை!
மாவீரர் நாள் நிகழ்வினை நடத்த விடாமல் இராணுவம் குழப்பம்!
இவ்வாறு பல வதந்திகள் குறிப்பிட்ட சில குழுவினரால் பரவவிடப்படுகின்றது. மேற்படி வதந்திகளை பரப்புவோரின் பிரதான நோக்கம் மக்களிடையே அச்சநிலையை தோற்றுவித்து இம்முறை மாவீரர் தின நிகழ்வில் கடந்த முறைபோன்று பெருமளவில் மக்களை பங்குகொள்ளவிடாமல் செய்வதே.
இங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. பொலிசார் ஒரு சில இடங்களில் சென்று நிகழ்வுகள் நடத்துவது குறித்து சாதாரண விசாரிப்புக்களை மேற்கொண்டதோடு அமைதியாக நிகழ்வினை நடத்துமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். எந்தவொரு இடத்திலும் நிகழ்வினை தடைசெய்யவில்லை. புதிதாக வீதிதடைகள் ஏற்படுத்தவில்லை.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பிரதான வீதியில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளமை குறித்து தமக்கு புகார் அளித்துள்ளதாக கூறி பொலிசார் வந்திருந்தனர். ஒலிபெருக்கி பாவனைக்கான அனுமதி நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் எடுக்கவில்லை அது எடுப்பதற்கு சில சிக்கல்கள் உள்ளன. கடந்த ஆண்டுகளிலும் அனுமதி எடுக்கப்படாமல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் ஒலிபெருக்கி பாவிக்கப்பட்டது.

நேற்றைய தினமே வீதியில் ஒலிபெருக்கிகளை கட்டவேண்டாமென விழா குழுவினர் அறிவுறுத்தியபோதிலும் இரவு பணியில் இருந்தவர்கள் அதை அங்கே கட்டிவிட்டார்கள். பொலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அது அகற்றப்பட்டும் விட்டது. அதிகாலையிலயே யாரோ ஒருவன் பொலிசாருக்கு அழைப்பெடுத்து அனுமதி இல்லாமல் ஒலிபெருக்கி கட்டியுள்ளார்கள் எனக்கூறியுள்ளான். அதன் பிரகாரமே பொலிசார் வந்திருந்தனர்.
பொலிசார் கரைச்சி பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் அவர்களை தொடர்புகொண்டும் ஒலிபெருக்கி பாவனை தொடர்பான முறைப்பாட்டினை கூறி இருந்தனர். ஈற்றில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஐயா ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக ஒரு வாக்குமூலம் அளித்தமையை தொடர்ந்து நிகழ்வை அமைதியாக நடத்தும் படியும் அதற்கு தாம் பூரண ஆதரவு தருவதாகவும் கூறி அகன்று சென்றனர்.
இங்கு எங்கும் வீதிதடைகள் போடப்படவில்லை. எவரும் மக்களை அச்சுறுத்தவில்லை. எனவே வதந்திகளை பரப்புவோரின் உள்நோக்கத்தை அறிந்துகொண்டு அவற்றை புறம்தள்ளி உங்கள் உறவுகளை நினைவு கூர துயிலுமில்லம் நோக்கி அணிதிரளுங்கள். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்துமுடிக்கப்பட்டுள்ளது. எம் உறவுகளை அஞ்சலிக்க எமக்கு எவரும் தடைகள் இடமுடியாது. அவ்வாறு இட்டாலும் அதை எதிர்கொள்ள மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர் எனவே அச்சமின்றி வாருங்கள்.
யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்வு நடத்த பல்கலைக்கழக நிர்வாகமே தடையேற்படுத்தி இருந்தது அதையும் தகர்த்து மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டுகொண்டிருக்கின்றனர். எனவே வதந்திகளை நம்பாதீர்கள்.
மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்கள்