கார்த்திகைமாதம் என்றால் தமிழீழ தேசமெங்கும் ஓர் உணர்வு மேலோங்கி இருக்கும் அதனை அப்போது உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். கண்களை மூடி அந்தக் காட்சிகளுக்குள் சென்றுபார்த்தால் மறு உலகத்திற்கு உங்களை அழைத்துச்செல்லும். எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள், காதுகளை நிறைக்கும் காவிய கானங்கள், வீதிகளை மேவி நிற்கும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட வீதிவளைவுகள், மாவீரர் நினைவு சுமந்த பதாதைகள், சுவரொட்டிகள் கார்த்திகை 27 நோக்கிய எதிர்பார்ப்புக்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள், வீதியில் அங்கும் இங்கும் வரிச்; சீருடை அணிந்த போராளிகளின் சுறுசுறுப்பு, வர்த்தக நிலையங்கள், பொதுநிறுவனங்கள் என போட்டி போட்டுக்கொண்டு மாவீரர் நாளை எதிர்கொண்ட அலங்கரிப்புகள் என எம் மனக் கண்முன்னே தேசியத் தலைமையின் கீழ் அணிசேர்த்த காலத்தை கொண்டுவருவோம். மாவீரர் வாரத்தில் இன்னும் உணர்வு இரட்டிப்பாகும். இந்தப் பொழுதில் தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை இந்த மண்ணுக்காகத் தந்த பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோர், உரித்துடையோர் மதிப்பளிப்புச் செய்யப்படுவர். அந்த மதிப்பளிப்பானது மிகவும் புனிதம் மிக்கதாக, மனதை வருடத்தக்கதாக அமைந்திருக்கும். இந்தக் காலத்தில் புலம்பெயர் தேசங்களில் வாழும் மாவீரர் பெற்றோர், உடன்பிறந்தோர், உரித்துடையோர் மதிப்பளிப்புச் செய்யப்படுவதும் வழமையாக்கப்பட்டு இன்றும் தொடர்கின்றது.
மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை நான் போற்றுகின்றேன். உங்கள் குழந்தைகள் தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தவர்கள். இந்த உன்னதமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்காக உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமைகொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகிவிட்டார்கள். என்ற தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனைக்கு அமைவாக மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்த்தப்பட்டது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து, எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தின் பின்னர், மக்கள் உளவியல் ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். கார்த்திகை மாதம் வந்தவுடன், அவர்கள் தமது பிள்ளைகளை நினைவுகொள்ளவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். எதிரியின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் தமது வீடுகளில்வைத்து தீபம் ஏற்றி, மாவீரத் தெய்வங்களைப் பூசித்தனர். அந்தவேளையில் கார்த்திகை தீபம் ஏற்றவே சிறிலங்கா இனவாதப் படைகள் தடைசெய்திருந்தன. கார்த்திகைத் தீபம் ஏற்றியவர்களைக் கூட சித்தரவதைக்கு உள்ளாக்கியது. அந்தவேளையில், எஞ்சியிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும் சிதைத்து, சிதிலமாக்கி வேடிக்கை பார்த்தது. இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர். என்னதான் அடக்குமுறைகளைச் செய்தாலும் மக்களின் மனங்களை வெல்லமுடியாமல் போனது சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் படைகளுக்கும். அடக்கு முறைகளோடு மெதுவாக காலம் ஓடிய வேளையில், மக்களும் மெல்ல மெல்ல தமது உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகள், சிதிலமடைந்த தமது உறவுகளின் கல்லறைகளை முடிந்தளவிற்கு ஒழுங்குபடித்தி மாவீரத் தெய்வங்களை பூசிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டும் புலம்பெயர்வாழ் மக்களின் நிதி உதவியோடும் உணர்வாளர்களின் உதவியோடும் மாவீரர் துயிலும் இல்லங்களைப் புனரமைத்து தமது உணர்வுகளுக்கு செயல்வடிவம் கொடுத்துள்ளனர்.
அநேகமான தாயகத்தின் பகுதிகளில் மாவீரர் பெற்றோர், உடன்பிறந்தோர், உரித்துடையோர் மதிப்பளிப்பும் இடம்பெற்றுள்ளன. இது தமது பிள்ளைகளைக்கொடுத்துவிட்டு, நாட்டையும் எதிரியிடம் கொடுத்துவிட்டு ஏக்கத்துடன் இருந்த பெற்றோருக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கக்கூடும். சிறுதொகை பண அன்பளிப்பு, தென்னம்பிள்ளை, அத்தியாவசிய உணவுப் பொருள்கள், உடுபுடைவை போன்றவை மதிப்பளிப்புச்செய்யப்பட்ட பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களின் முகங்களில் ஓர் ஏக்க உணர்வு பிரதிபலித்ததைக் காணமுடிந்தது. தமிழீழத் தேசியத்தலைவரைத் தேடிய ஏக்கமாகவே அது பிரதிபலித்தது.
தாயிடம் இருந்து பிரிந்த பிள்ளைக்கு எத்தனையோ வகையான விளையாட்டுப் பொருட்களையோ, தின்பண்டங்களையோ கொடுத்தாலும் அவர்களுக்கு தமது தாயின் நினைவுதான் வந்துகொண்டே இருக்கும். அவ்வாறுதான் ஒவ்வொரு மாவீரர் பெற்றோருக்கும் தமிழீழத் தேசியத் தலைவரின் முகம்தான் நினைவில் இருக்கும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், மேஜர் பசீலன் அவர்களின் தாயார் கடந்த ஆண்டு மாவீரர் சுடர் ஏற்றுவதற்கு அழைப்பு விடுத்தபோது, அந்தத் தாயார் தமிழீழத் தேசியத்தலைவரை நினைத்தே தான் அழுவதாகக் கூறிய காணொளி அனைவரின் மனங்களையும் உருகவைத்தது. இவ்வாறுதான் தமிழீழ மக்கள் தமிழீழத் தேசியத்தலைவரின் வருகைக்காகவே காத்திருக்கின்றார்கள். இதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் பெற்றோர், உடன்பிறந்தோர் மதிப்பளிப்பு காலம்காலமாய் நடைபெற்றுவருகின்றது. குறித்த மதிப்பளிப்பு மாவீரர் பெற்றோர் உடன்பிறந்தோர் உடன் உறவினர்களும் மதிப்பளிப்புச் செய்யப்படுவதாக சமூகவலைத் தளங்களில் பலரும் தமது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். புலம்பெயர் தேசங்களிலும் பெருமளவில் மாவீரர் பெற்றோர், உடன்பிறந்தோர் உள்ளனர் என்பதை குறித்த விமர்சகர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அத்தோடு, பிரான்சு நாட்டில் சிறிலங்கா கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவடைந்த மூன்று மாவீரர்களின் கல்லறைகள் இருப்பதுடன், குறித்த மாவீரர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர் பிரான்சில் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு புலம்பெயர் தேசங்களில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களின் உறவுகளும் வாழ்கின்றனர்.
தாயகத்தில் எவ்வாறு மாவீரர் பெற்றோர், உடன்பிறந்தோர் மதிப்பளிப்பு செய்யப்படுகின்றனரோ அவ்வாறே புலம்பெயர் தேசங்களிலும் மதிப்பளிப்பு இடம்பெறுகின்றது. இதனை கருத்தில் கொண்டு சமூகவலைத்தளங்களில் அதிமேதாவித்தனமாகக் கருத்துக்களை விடுபவர்கள் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டியது அவசியம். எனவே எமது மாவீரத் தெய்வங்களை மனதில் இருத்தி, தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் வழியில் ஒருமித்து பயணிப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்!
– கந்தரதன்.
நன்றி: ஈழமுரசு (2018 நவ.27)